எட்டுக் காலும் கூரையில் தகரமும்
கொண்டாலும் மனதினில் நீங்கா
நினைவுகளை தந்த மண்டபமே!
நீ இன்றி இன்று மைதானம் வெறிச்சோடியது,
வயதானால் கழட்டிவிடும் எங்கள்
கலாச்சாரம் உன் செயலில் பிழைத்துப்
போனது, கண்டு கொள்ளாமலே
விட்டுவிட்டோம், பொறுத்துக்கொள்ளாத நீ
கண்டு கொள்ளாத எங்களிற்கு நல்ல பாடம்
புகட்டினாய்…….
இடிந்து விழுந்தது உன் எட்டுக் கால்கள்
மட்டுமல்ல, எட்டு திக்கும் பரந்து நிற்கும்
எங்கள் பெயரும்தான்!
வெறிச்சோடியிருக்கும் மைதானத்தில்
இனியும் எத்தனை காலம் தான்
விளையாட்டு போட்டிகள் நடக்கும்,
உன் நினைவாக இன்னொன்று அமைக்க
இன்றோ நாளையோ இன்னொரு நீ
அமைக்கப்படும் என அவ்வப்போது
அனைவரும் வந்து பார்த்து செல்கிறார்கள்.
காலம்தான் கைகூடி வரவில்லையோ அன்றி
கண்டவர்கள் கரிசனை இன்றி
இருக்கிறார்களோ!

காலம் செல்ல செல்ல கரைந்து போனாலும்
பத்து போட்டு போட்டு பத்திராமாய்
பாதுகாத்தோம் நாம் பழந்தமிழர் என்பதால்….
அலங்கோலாமாய் நீ ஆனபின்னும் அதனை
மறந்து அவ்வப்போது அலங்காரமாய்
விழாக்கள் நடாத்தினோம்!
நடந்தவை எல்லாம் நன்றாகவே நடந்தன,
அவமானம் பொறுக்காத நீயோ நடுநிசியில்
ஊரும் அறியாத வேளையில் உன்னை
இடித்துக் கொண்டாய்!

இடிந்து போனோம்! உனக்குள்ளும் இத்தனை
தன்மானமா?
ஆறறிவு கொண்ட மனித இனம்
அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும், கதிரைக்கும்
அடித்துக் கொள்ளும் போது, அறிவே
இல்லாத நீ இத்தனை அழகாய் மண்ணோடு
மாண்டுவிட மடிந்து போனாய்.
இன்னொரு நீ புதிதாக பிறப்பதற்கு
இனி எத்தனை காலம் தான் நாம்
காத்திருப்போம்!
