வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி
எமது தாயக காரைமண்ணில் தமிழ் பேசும் சிறார்களுக்கு சைவக்கல்வி போதிக்க வேண்டுமென்ற நோக்குடன் 1947ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி எமது முன்னோர்களின்
தளராத முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி 1974ம் ஆண்டில் 1C தரப் பாடசாலையாகவும் 1979ம் ஆண்டில் 1AB தரப் பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. துரதிஷ்ட வசமாக 1991 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 25ம் திகதி இடம் பெயர வேண்டிய நிலை கல்லூரிக்கு ஏற்பட்டது. இடம் பெயர்ந்த நிலையில் 1993ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி கல்லூரியின் தனித்துவம் பேணும் நோக்கில்
வட்டுக்கோட்டையில் இயங்க ஆரம்பித்தது.
இக்கல்லூரி வைரவிழாக்கண்ட நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஏனைய
கல்லூரிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. இக் கல்லூரியில் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையான சகல பிரிவுகளும் நடைபெற்று வருகின்றன. 1991ம் ஆண்டு 1289 மாணவர்களுடன் இயங்கிய இக்கல்லூரி இன்று 610 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.
1996ம் ஆண்டு ஆடி மாதம் கல்லூரி மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்தது. இற்றைக்கு 13 ஆண்டுகளாக தொடர்ச்சியான கல்விப்பணியை இச்சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஆற்றி வருகின்றது. கற்றலோடு இணைப்பாட விதான செயற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கோட்ட, வலய மட்டங்களில் வெற்றிகளைத்தட்டி கம்பீரநடையுடன் இன்று மிளிர்ந்து வருகின்றது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்:
2005 – 07.0 வீதத்திலும்
2006 – 20.1 விகிதத்திலும்
2007 – 38.5 விகிதத்திலும்
2008 – 20.5 வீதத்திலும் மாணவர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
க.தொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்:
2005 – 76.6 விகிதத்திலும்;,
2006 – 80.0 விகிதத்திலும்,
2007 – 65.0 விகிதத்திலும்,
2008 – 72.0 வீதத்திலும் மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்:
2005 – 68.18 விகிதத்திலும்,
2006 – 58.8 விகிதத்திலும்,
2007 – 62.0 விகிதத்திலும்,
2008 – 65 விகிதத்திலும் மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில் 39 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர். அவர்களுடன் இணைப்புப் பெற்ற 6 ஆசிரியர்களும் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் ஒரு குடும்பம் போன்று தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி வருவதுடன் நேர காலம் பாராது கல்லூரியின் வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக தூரம் கடந்து அதிக நேரம் செலவு செய்து வருகின்ற போதிலும் உரிய நேரத்திற்குப் வருகை தந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்
மாணவர்களின் நடத்தை சார் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற சமூகப் பொருத்தப் பாடுடையனவாக காண்கின்ற பணியை மாணவர் மன்றங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் க.பொ.த உயர்தர மாணவர் மன்றம், மாணவ முதல்வர் மன்றம் இந்து
மாணவர் மன்றம், முத்தமிழ் மன்றம், விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம், பாரதியார் மன்றம், வள்ளுவர் மன்றம், ஆரம்பப்பிரிவு மாணவர் மன்றம் என்பன சிறப்பாக இயங்கி வருகின்றன. இம் மன்றங்கள் சமூக, சமய கலாசார பண்பினைப் பெறும் வகையிலும் மொழியாற்றல் விருத்தி, சமூகத்துடன் இணைந்து வாழும் மனப்பாங்கினை உருவாக்குவதில் வெற்றி கண்டுவருகின்றன.
இக்கல்லூரி இணைப்பாட விதான துறையில் சிறந்த சாதனைகளைப் படைத்து வருகின்றது. இவ்வாண்டு வலைப்பந்தாட்ட அணி கோட்ட மட்டத்தில் 17, 19 வயது அணிகள் முதலிடத்தையும் 15 வயது அணி இரண்டாம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வலய மட்டத்தில் வலைப்பந்தாட்டம் 15, 19 வயது அணிகள் 1ம் இடத்தையும் 17 வயது அணி 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. மென்பந்து துடுப்பாட்டத்தில் கல்லூரி அணி 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
அதே போன்று மெய்வல்லுநர் போட்டியில் அதிக இடங்களைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்ட மட்டப் போட்டியிலும் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுக்கொண்டது. கரப்பந்தாட்ட போட்டிகளில் கோட்ட மட்டத்தில் 17, 19 வயது அணி முதலாம் இடத்தையும் வலய மட்டத்தில் 17 வயது அணி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. கோட்ட மட்ட வலய மட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் சிறப்பாகவும் ஆர்வத்துடனும் பங்குபற்றி தீவக வலயத்திலே அதிக இடங்களாகப் பெற்ற முதல் தர பாடசாலையாக இயங்கி வருகின்றது. மாவட்ட மட்ட தமிழ்த்தின போட்டிகளில் அதிக நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பரிசில்களையும் பெற்றுக் கொண்டது. ஆங்கிலதினப் போட்டியில் வலய மட்டத்தில் 29 இடங்களைப் பெற்று தீவகவலயத்திலேயே
முதலாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் தனித்துவத்தைப் பெறுவதற்கு கல்லூரியின் அபிவிருத்திச் சபையினர் அளித்து வருகின்ற ஆக்கமும், ஊக்கமும் உறுதியான ஒத்துழைப்பும் கல்லூரி துடிப்பாக
செயல்படுத்துவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது சபைச் செயலாளராக மு.விசுவநாதன்அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
நீண்;ட காலத்தின் பின் இக் கல்லூரிக்கான பழைய மாணவர் சங்கமும் அங்குரார்பணம்
செய்து வைக்கப்பட்டுள்ளது. 2009 ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.