சிவா மகேசன் என்றொரு புத்தகம்!

அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா T.மகேசன் அவர்கள்.

திரு.சிவா மகேசன் அவர்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவராக கடமையாற்றிய 2014- 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவருடன் தொடர்ச்சியான தொடர்புகளை கொண்டிருந்தேன் என்பதாலும் அதன் பின்னரும் நட்பு ரீதியாகவும் அவருடனான தொடர்புகள் இருந்த காரணத்தினாலும் அவருடைய குணாதிசயங்களையும் அறியப்படாத பக்கங்களையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது.

காரைநகர் மண்ணிற்கும் மக்களிற்கும் அனைவரும் அறிய காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக அதன் தலைவராக இருந்து செய்த செயற்பாடுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாகவும், அதன் நிர்வாகம் தவிர்ந்த வகையிலும் திரு.சிவா மகேசன் அவர்கள் ஆற்றிய மனிதாபிமான பணிகள் எண்ணில் அடங்காதவை. காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவராக காரைநகர் அபிவிருத்தி சபையில் காரைநகர் மக்களிற்காக ஆற்றிய பெரும் பணிகளில் வியத்தகு தகுதியாக அன்பையே மூலதனமாக கொண்டு அன்றைய காலத்தில் அனைவரையும் அரவணைத்துச் சென்று காரைநகர் அபிவிருத்தி சபையினை அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி பாதையில் இட்டுச்சென்றார்.

காரைநகர் மாணவர் நூலக பணியில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன், காரைநகர் பாடசாலைகளிற்கு கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் திட்டத்தினை இடம், பொருள், ஏவல் அறிந்து வெற்றிகரமாக செயற்படுத்தி முடித்தார்.

திரு.சிவா மகேசன் அவர்களின் பெரும் மூலதனம் அவருடைய அன்பு. எவர் மனதையும் புண்படுத்தாத சீரிய சிந்தனை. எந்த காலத்திலும் அவருடைய குரல் பணிவின் தன்மையை உணர்த்தியே இருக்கும். நீண்ட பல தசாப்தங்கள் வேற்று நாட்டில் வாழ்ந்து இருந்தாலும் இன்றும் காரைநகரில் வாழும் சேவையாளர்கள் எவரிடமும் இல்லாத ஊர் பற்றும் காரை மக்களின் நலன்களில் அதீத அக்கறையுடனும் செயற்பட்ட எள்ளவும் சுயநலமற்ற மாமனிதர் திரு.சிவா மகேசன் அவர்கள்.

தனது எல்லைகள் அறிந்து செயற்பட்டவர், ஆனால் அவரிடம் இருந்த நிதி வளங்கள் அனைத்தையும் ஊரிற்காக தர்மம் செய்ய ஒரு போதும் பின்னின்றவர் அல்ல. வலது கை கொடுப்பது இட துகைக்கு தெரியக்கூடாது என்று திரு.சிவா மகேசன் அவர்கள் செய்த தான தர்மங்கள் ஏராளம் ஏராளம். தன்னுடைய நிலமை அறிந்து எனக்கு நிறையவே அறிவுரைகள் நட்பு ரீதியாக சொல்வார். ஒவ்வொரு முறை காரைநகர் செல்லும் போதும் எப்போதும் என்னை அழைத்து பேசுவார். இந்த முறை நானும் தவறவிட்டேன், அவரும் தவறிவிட்டார். நான் படித்த புத்தகம் ஒன்று இடை நடுவில் காணாமல் போய்விட்டது.

திரு.சிவா மகேசன் எனும் அரிய புத்தகத்தை படித்தவர்கள் சிலரே. திரு.சிவா மகேசன் அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட களபூமி கலையகம் திரு.சிவா மகேசன் என்னும் புத்தகத்தின் ஒரு பகுதி மட்டுமே ஆனால் திரு.சிவா மகேசன் அவர்கள் காரை மண்ணின் மீதும் மக்கள் மீதும் கொண்ட அன்பும் பாசமும் பக்தியும் எவராலும் கண்டறியப்படாத அதியசமே!

எனக்கு தெரிந்த பல இரகசியங்களும் உங்களுடனேயே உங்கள் விருப்பத்தின் பெயராலும் உங்கள் மீது நான் கொண்ட பக்தியும் உங்கள் மீது நான் கொண்ட மரியாதை காரணமாகவும் கடவுளுக்கே சமர்ப்பணம் ஆகட்டும். காரை மண் என்றும் எப்போதும் உங்களைப் போன்ற நல்ல குணம் கொண்ட ஆத்மாக்களின் வழி நடாத்தலால் என்றும் எப்போதும் வளர்ச்சி பாதையை நோக்கியே செல்லும்.

தீசன் திரவியநாதன்

'எனது ஊர் காரைநகர்"
கனடாவில் வெளியாகும் காலாண்டு
சஞ்சிகை உங்கள் வீட்டிற்கும்
இலவசமாக வந்தடையும். எதுவித
தயக்கமும்இன்றி உடனடியாக
அழையுங்கள்
416 821 8390

உங்கள் விலாசம் அல்லது
தொலைபேசி இலக்கத்தை
மின்அஞ்சலில் அனுப்பவும்.
உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
theesan@karainews.com
நன்றி!

More From Author

சேவையால் உயர்ந்த எங்கழூர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலன்

சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர் ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *