சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர்
ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை நாவலர்பெருமான் வழிநின்று அவருக்குப் பின் யாழ்ப்பாண
மண்ணில் சைவப்பாடசாலைகளை உருவாக்கிய பெரியார்கள் பலர். அவர்களில் பிரபல்யம் வாய்ந்தவர் காரைநகரைச்சேர்ந்த அருணாசல உபாத்தியாயர் ஆவார். இவர் இந்து ஆங்கிலப் பாடசாலை(காரைநகர் இந்துக்கல்லூரி), சுப்பிரமணிய வித்தியாசாலை, வியாவில் சைவ வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு ஊன்றுகோலாக இருந்தவர். இவ்வகையில் சி.சுப்பிரமணியபிள்ளை அவர்களும் இவரின் ஆலோசனையைப் பெற்று சுப்பிரமணிய வித்தியாசாலையை ஆரம்பித்தார். இவர் இப்பாடசாலைக்கு வேண்டிய நிலத்தையும் வகுப்புக்கள்
நடாத்துவதற்கு கட்டிடங்களையும், தளபாடங்களையும்
வழங்கியுள்ளார். நிலத்தையும் கட்டிடத்தையும் கல்விக்காக
தர்மசாதனஞ் செய்த ஒப்பற்ற பெரியார் ஆவார்.

இவர் பத்து வருடங்களிற்கு மேலாக அங்கு கற்பித்த
ஆசிரியர்களுக்கு வேதனங்கொடுத்து தாபரித்து வந்தார். இவர் நாகமுத்து புலவரை ஆசிரியராக நியமித்து ஆதரித்தவராவர். இவர் ஒரு சிறந்த சிவபக்தர், சிதம்பரத்திற்கு அடிக்கடி சென்று தில்லைக்கூத்தனை வழிபாடு செய்கின்ற அன்பராவர். சிதம்பரத்தில் உச்சிக்காலப்பூசை தினந்தோறும் ஒழுங்காக
நடைபெற எழுபது பரப்பு வயற்காணியை வாங்கி வழங்கியுள்ளார். அவ்வாலயத் திருப்பணிக்காக அக்காலத்தில் ஆயிரம் ரூபா வழங்கிய வள்ளலாவார். இவர் எமது ஊரில் உள்ள ஈழத்து சிதம்பரத்தில் அபிஷேகக்கிணறு, வெளிக்கிணறு என்பவற்றைக் கட்டிக்கொடுத்ததோடு, சௌந்தராம்பாளுக்கும்,
விநாயகப்பெருமானுக்கும் கோயிலை அமைத்துக் கொடுத்தார். காரைநகர் மருதடி விநாயகர் ஆலயத்திற்கும் அபிஷேகக் கிணறு, வெளிக்கிணறு, ஆவுரோஞ்சிக்கல் என்பவற்றைக் கட்டிக்கொடுத்த வள்ளலாவர்.
தீனாப்பிட்டி வயலின் மத்தியில் குளமும், கிணறும் கட்டிக்
கொடுத்தார். சிதம்பரத்தில் இவரது சிறப்பான திருத்தொண்
டினை அவதானித்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் இ
வரை அழைத்து தன்னால் செய்யக்கூடிய உதவி என்ன என்று கேட்டபோது சுப்பிரமணிய வித்தியாசாலையை அர ச நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றித்தரும்படி கேட்க,மிகவிரைவில் அவ்வாறே மாற்றிக்கொடுத்த்தார்.
இவரை பக்காரச்சுப்பர் எனவும் அழைப்பர். இவர் வறிய குடும்த்தைச் சேர்ந்த பெண்கள் பொருளின்றி விவாகம் செய்யாது இருந்தபோது தன்னால் இயன்ற பொருள் கொடுத்து அவர்கள் விவாகஞ்செய்வதற்கு உதவி புரிந்தார். இத்தகைய உயர் பரோபகாரியாக விளங்கிய இவர் 1902ம் ஆண்டு வைகாசித்திங்களில் அமரத்துவம் எய்தினார். இவர் இவ்வுலகை நீத்தக் காலை த.நாகமுத்துப்புலவர் தமது இரங்கலில்
‘எவ்வண்ணம் பாடுவேன் எவ்வண்ணம் பேசுவேன்
எவ்வண்ணம் கையால் எழுதுவேன் – செவ்வண்ணம்
மனங்கொள் சுப்பிரமணியபதி மாண்டாரெனும்
மாற்றம் புண்கொள்ள நெஞ்செரியும் போது”
என்று பாடினார். இவரது இரங்கல் பாடலில் இருந்து இவர்
காரைமக்களின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதை
அறியமுடிகின்றது. அன்னார் நிறுவிய தாபனம் இன்றும் அவர்நாமத்தை வழங்கிக்கொண்டிருக்கின்றது.
