எழுத்து: திரு அ.நவசிவாயம்பிள்ளை – ஆசிரியர் – காரைநகர்
நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்.
சாநாளும் வாழ் நாளும் சாய்க்கட்டெம் பெருமாவிற்கு
பூ நாளும் தலைசுமப்பப் புகழ் நாமம் செவி கேட்ப
நாநாளும் முயன்றேத்தப் பெறலாமே நல்வினையே.
என்று திருஞான சம்பந்தர் கூறியது போல நல்வினை செய்து பெரிய தர்மங்கள் ஈந்த பெரியார், அமரர் நவசிவாயம் நடராசா இவர் பெரும் கல்விமான். சட்டத் துறையில் உயர் கல்வி உயர் நீதி மன்றசட்டத் தரணியாக (Advocate) கடமையாற்றியவர்.
KC – KING COUNCIL பட்டம் பெற்றவர். சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
தனவந்தர் நீதி அமைச்சு இவரின் தொழிற் திறமையை கண்டு சுப்பிரிம் நீதிமன்ற
SURRE – COURT நீதி அரசராக நியமித்தது. இவரது சேவைக் காலத்தில் 1947 வருடம் நீதிமன்றுக்கு வந்த கிரமினல் வழக்கு ஒன்றில் எதிரி குற்றவாளி என்று ஜீரர்கள் ஒரு மனதாக தீர்ப்பழித்தனர். நீதியிற் தவறாது நீதி வழங்க வேண்டும். நீதிபதி வேறு வழியின்றி எதிரிக்கு மரணத்தண்டனை விதித்தார்.
வீடு வந்த நீதிபதியின் மனம் வெதும்பியது. எனது கல்வி ஒரு உயிருக்கு மரண தண்டனை வழங்குவதற்கா? சீசீ இதற்காகவா வாழ்வு. கூத்தபிராணைப் பணித்தார் அக்கணமே ஆவி பிரிந்தது. ஐம்பது வயதில் அமரரானார்.
பாரியார் தங்கம்மா மனம் நொந்தார். நீர்க்குமிழி வாழ்க்கையை உணர்ந்தார். தானதர்மங்கள் செய்ய முற்பட்டார். நிலையான இன்பத்தை அடைய குறி வைத்தார். கணவன் நடராசா நீதிபதியிடம் நாளுக்கு நாள் தேடிய சட்டநூல்கள் அடங்கிய நூல் நிலையம் ஒன்று வீட்டில் இருந்தது. அந்த அரிய நூல்கள் யாவற்றையும் சட்டக்கல்வி கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இலங்கை பல்கலைக் கழகத்திற்கு
அன்பளிப்பாக வழங்கினார்.
1950ம் ஆண்டில் காரைநகர் சயம்புப் பாடசாலைக்கு எதிர்புறமாக இருந்த இவரது காணியில் ஏறத்தாழஅறுபதினாயிரம் ரூபா செலவில் பிரமாண்டமான (NADARAJAH MEMORIAL HALL) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தினை கட்டுவித்தார். அக் காலத்தில் யாழ் பிரதேசத்திலே பெரிய மண்டபமாகக் கருதப்பட்டது. அப்போதைய நீதி மந்திரி கௌரவ எ.எஸ்.இராஜபக்ஸ அவர்கள் இம் மண்டபத்தினை திறந்து வைக்க இலங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் ஐவர் ஜென்னிங்ஸ் அவர்கள் மண்டபத்திலுள்ள பெரிய நடராசா அவர்களது உருப்படத்தினை திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.
மண்டபத்தோடு சேர்ந்த எஞ்சிய காணித் துண்டையும் காரை – இந்துக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கினார். இம் மண்டபத்தில் மாணவர்கள் காலைப் பிரார்த்தனைக்காக ஒன்று கூடுவர். பொதுப் பரீட்சைகள், கலை நிகழ்வுகள், ஒன்று கூடல்கள் ஆகிய பல நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றன. (தற்சமயம் இம் மண்டபத்தின்கோபுரம் முற்றாக திருத்தத்தினை எதிர்பார்த்துள்ளது.)
இந்தக் காணிக்கு மேற்கு எல்லையாக அமைந்த காணித் துண்டில் (MATERNITY HOME AND DISPENSARY) மகப் பேற்று நிலையத்தையும், மருந்தகத்தையும் கட்டுவித்து காரை வாழ் மக்களது சுகாதார வைத்திய சேவைக்காக அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். அக் காலத்தில் பிரசவத்திற்காக காரை மக்கள் மூளாய்வைத்திய சாலைக்கு செல்வதே வழக்கம். தங்கம்மா அம்மையார் இந்த பிரசவ மனையில் பிள்ளை பெற்று எடுக்கும் தாய்மார்களுக்கு தலா ஒரு பறை நெல் இலவசமாக வழங்கினார். இப்படியாக இலவச நெல் கிடைக்கின்றதென்றதும் அனேகமாக பிள்ளைப்பேறுகள் இங்கேயே நடைபெற்றன.
இவ் வைத்தியசாலை நாளடைவில் வளர்ந்து ஆண் நோயாளர்களுக்கு தனியாகவும் பெண் நோயாளர்களுக்குதனியாகவும் தங்கி நின்று சிகிச்சை பெறும் வாட்டுகளுடன் கூடிய சுற்றயல்கூறு Peripheral வைத்தியசாலையாக தற்சமயம் நிகழ்கின்றது. வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, சுழிபுரம், மூளாய் ஆகிய பல இடங்களில் இருந்து நோயாளர்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். எதிர் காலத்தில் மாவட்ட
வைத்தியசாலை தரம் உயர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.
படம் - வைத்தியசாலை
காரைநகர் சிவன் கோயிலின் வடக்கு வீதியில் அந்தனர்களின் இல்லங்களுக்குச் சமீபமாக பெரியசிவாச்சிரமம் ஒன்றை 1961ம் ஆண்டு நிர்மாணித்து அங்கே கூத்தபிரானை பிரதிஸ்டை செய்து தெய்வீக ஒளியை பரப்பினார். பல அடியார்கள் இவ் ஆச்சிரமத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து திருமுறைகள் ஓதி சிவ தரிசனம் பெற்ற சிவசிந்தையில் ஈடுபட்டு மதிய அன்னதானத்தில் பங்கு பற்றி
ஆண்மீக வாழ்வை வளர்த்தார்கள். ஒவ்வொரு வருடமும் நடராஜருக்குரிய ஆறு அபிஷேக தினங்களிலும் அபிஷேக ஆராதணை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பெற்று வந்தது. மார்கழி மாதத்தில் திருவெம்பாவை நாட்களில் திருவெம்பாவை பூஜை நடைபெற்று அன்னதானம் சகலர்க்கும் வழங்கப்பட்டும் வந்தது. அத்தோடுசமயகுரவர் குருபூஜைகளும் நடைபெற்று வந்தன.
ஓவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சிறுவர்களுக்கும் பண்ணிசை வெளியூர்களில் இருந்து சங்கீத வித்துவான்களை அழைத்து பயிற்றுவித்தார்.
சிவாயநமவென்று நினைத்திடுவோம்
சிவன்சேவடியை போற்றிடுவோம்
சிவாச்சிரமமென பெயர் வழங்கிடுவோம்
சிவமேதுயென வாழ்த்திடுவோம்
சின்மயநாதன் ஏத்திடுவோம்
சித்தம்சினொடு சேர்த்திடுவோம்
பத்தர் குழாமொடு பாடிடுவோம்
சித்தர் குழாமொடு நாடிடுவோம்
அம்பாளருளை அடைந்திடுவோம்
அரன்திருவடிதனை அணுகிடுவோம்
சிவன்திருவருள் பெற்றிடுவோம்
சிவனருள் நிறைந்து வாழ்ந்திடுவோமே……….
என்கிறது சிவாச்சிரம செபமாலை.
தங்கம்மா அம்மையார் தனக்குப் பின்னர் இவ் ஆச்சிரமத்தை பரிபாலனம் செய்ய ஏராளம் நெற் காணிகளையும் நிலையான வைப்புக்களில் பெருந்தொகை நிதியினையும் வைத்து அவற்றிற்கு பொறுப்பாளிகளாக வாரிசுகளையும் நியமித்து சிவபதம் அடைந்து விட்டார். நியமித்த வாரிசுகளின் அசிரத்தையால் ஈழத்து சிதம்பர வடக்கு வீதியிலமைந்த இப் பெரிய சிவாச்சிரமம் தற்பொழுது பொலிவிழந்து உறங்குகின்றது.
சிவநடராசா போற்றி ஓம்
சிற்றம்பலவா போற்றி
தவக்கனல் ஒளியே போற்றி ஓம்
தத்துவா தீதா போற்றி
அருட் பெரும் சோதியே போற்றி
ஆனந்தத் தாண்டவா போற்றி
திருப்பெருந் துறையில் வந்த
தேசிக மணியே போற்றி…………..சிவாச்சிரம கீதம்
இவ்வாறாக அமரர் நடராசா அவர்களும் மனைவி தங்கம்மா அம்மையார் அவர்களும் காரைநகர் மக்களின் கல்விக்காக, வைத்திய சுகாதார சேவைக்காக, சைவ மக்களின் ஆன்மீக வாழ்வுக்காக செய்த அறப்பணிகள்- தர்மங்கள் எண்ணிலடங்கா. இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் பலர் அறியாமல்இருந்த உண்மைகளை இங்கு கூறுவது மிகப் பொருத்தமே. காரை மாதாவின் தர்ம தேவதைகள் மிகையாகாதல்லவா.