ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் நீலிப்பந்தனை, காரைநகர்
நல்லதம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவது பிள்ளையாக விஜயரட்ணம் அவர்கள் 26.06.1923ம் ஆண்டு மலேசியாவில் பிறந்தார். அவரது இரண்டாவது வயதில் தந்தையார் மலேசியாவில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து தாயார் சிவகாமிப்பிள்ளை அவர்கள் தனது ஒன்பது பிள்ளைகளுடனும் தனது கணவரின் பூர்வீக இடமான காரைநகர் நீலிப்பந்தனையில் உள்ள அவர்களது வீட்டிற்கு வந்து குடியேறினர்.
சிறந்த கல்விப் பாரம்பரியமும் கல்வி அறிவும் கொண்ட இவரது தாயார் சிவகாமிப்பிள்ளை அவர்கள் சடையாளி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் ஆசிரியராக தொழில் புரிந்தும் தனது கணவனது விதவைப் பென்சனுடனும் கிடைத்த வருவாயில் தனது ஒன்பது பிள்ளைகளையும் கல்வியில் சிறந்தவர்களாக வளர்த்து வந்தார். அமரர் விஜயரட்ணம் அவர்களுடன் ஐந்து பிள்ளைகளை ஆங்கில
ஆசிரியர்களாகவும், மற்றைய பிள்ளைகள் அரசின் உயர் பதவிகளை வகிக்கும் அளவிற்கும் அனைவரையும் கல்வியில் சிறந்தவர்களாக வளர்த்தெடுத்தார்.
அமரர் விஜயரட்ணம் அவர்கள் ஆரம்ப கல்வியை சடையாளி அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றுத்தேறினார். உயர் கல்வியை முடித்த அமரர் விஜயரட்ணம் அவர்கள் கூட்டுறவு பரிசோதகராக தனது தொழில் பராயத்தை ஆரம்பித்தார். ஆசிரியத் தொழிலின் விருப்பத்தினால் மகரகம ஆசிரியப் பயிற்சி கல்லூரியில் ஆங்கில பாடத்தில் பயிற்சி பெற்று ஆங்கில ஆசிரியரானார்.
பதுளை ஊவாக் கல்லூரியிலும், கம்பளை சாகிரா கல்லூரியிலும் ஆங்கில ஆசிரியராக கடமையேற்றார். ஆங்கில மொழியில் புலமையும் ஆர்வமும் காரணமாக லண்டன் டீ.யு பரீட்சையில் 1963ம் ஆண்டு பரீட்சையில் தோற்றி பட்டதாரியானார்.
ஆங்கில பட்டதாரியான அமரர் விஜயரட்ணம் அவர்கள் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி, இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, சுழிபுரம் விக்டோரியா கல்;லூரி ஆகியவற்றில் ஆங்கில ஆசிரியராக தொழில் புரிந்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் 25 வருடங்கள் கடமை புரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1982ம் ஆண்டு தனது 60வது வயதிலே ஓய்வு பெற்ற பின்னரும் அனலைதீவு மகா வித்தியாலயத்தில் பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும், கல்வி அமைச்சினால் வவுனியாவில் நடாத்தப்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட விசேட பயிற்சி வகுப்புக்களிற்கு இணைப்பாளராக பதவியேற்று ஆங்கில விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். ஆங்கில அறிவை புகட்ட அதிகாலை வேளையிலும் இரவு வேளையிலும் பணத்தை எதிர்பாராது ரியூசன் வகுப்புக்களை தனது வீட்டிலே நடாத்தியதுடன் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களிற்கு பயிற்சியும் அளித்து வந்தார்.(இவ்வரைதலை தொகுத்துக் கொண்டிருக்கும் நான் வாரிவளவு நல்லியக்கசபையின் ஆங்கில பேச்சு போட்டிக்காக அமரரிடம் பயிற்சி பெற்று சிறந்த முறையில் பேசிய போதிலும்
துரதிஸ்டவசமாக பேச்சு போட்டியின் அன்று நடுவராக அன்னாரே இருந்த காரணத்தினால் தன்னிடம் பயின்ற மாணவனுக்கு தானே முதல் பரிசு கொடுக்க கூடாது என்ற காரணத்தினால் இரண்டாவது பரிசினை மட்டும் எனக்களித்தார். இதனை போட்டி முடிவில் அன்னாரே என்னிடம் கூறினார்)
யாழ்ப்பாணக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலித்து ஜேசப்பின் அவர்களை மணமுடித்து இரண்டு பிள்ளைகளையும் பின்னர் அவரது உறவினரான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் மகளான சிவயோகம் அவர்களை மணமுடித்து ஏழு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டார். சிவயோகம் அவர்கள் ஆங்கில ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி 2003ம் ஆண்டு அமரத்துவம் அடைந்தார்.
அன்னாரது பிள்ளைகளும் இன்று ஆங்கில மொழியில் புலமையும் ஆர்வமும் கொண்டு ஆங்கில ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் திழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமரர் விஜயரட்ணம் அவர்கள் கல்வி சேவையுடன் அரசியல், சமூக சேவை என மக்களிற்காக தொண்டாற்றவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தந்தை செல்வா அவர்களுடன் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக சேர்ந்து செயற்பட்டார். பின்னர் பகிரங்கமாக அக்கட்சியில் இருந்து விலகி கம்மியூனிசக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 1958ம் ஆண்டு திருமலை பாதயாத்திரை சென்ற காரணத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். காரைநகர் 6ம் வட்டாரத்தின் அங்கத்தவராக தெரிவு
செய்யப்பட்டார். அதன் மூலம் காரைநகர் வடக்கு கிராம அபிவிருத்தி ங்கத்தை(சுனுளு) அமைத்து அபிவிருத்திகளை செய்தார், காரைநகர் நீலிப்பந்தனை மகளிர் அபிவிருத்திச் சங்க கட்டிடத்தை அமைப்பதற்கு தனது சொந்த காணியை வழங்கினார்.
அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் அவர்கள் நடமாடும் ஆங்கில பல்கலைக்கழகமாக திகழ்ந்து ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மாணவர்கள் மனதிலே சிறந்த ஆசானாக உயரிய இடத்தினை பெற்றுக்கொண்டார். ஊருக்குள்ளே, உறவுகளிற்குள்ளே, அயலவர்களிற்குள்ளே அருமை நண்பனாகவும், படிக்காத பாமர மக்களுடனும் உரிமையுடன் உறவாடி அவர்களுடன் நல்லுறவை பேணிய சிறந்த பண்பாளர்.
அமரர்; விஜயரட்ணம் அவர்களால் ஆங்கிலமொழி காரைநகரில் அவர்காலத்தில் பெருமை பெற்றது. பிறந்தவர் என்றும் இறப்பது நியதியென்றாலும் அமரர் அவர்கள் அவரது பிள்ளைகள் மூலம் மேலும் இரண்டு கலாநிதி பட்டம் பெற்ற ஆங்கில விரிவுரையாளர்களையும், ஆங்கில ஆசிரியராகவும் தனது பிள்ளைகளை தமிழ் மக்களிற்கு விட்டுச்சென்றுள்ளார். அமரர் நல்லதம்பி விஜயரட்ணம் அவர்கள் காலத்தால் அழியாத புகழைவிட்டு 16.08.2007 அன்று சிவபதம் அடைந்தார்.
‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளத்தில் சான்றோர் பக்கத்தில் அன்னாரின் பெருமைகளை எடுத்து வருவதில் பெருமை கொள்கின்றது.