காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்குஅவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர்

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் ச. அருணாசல உபாத்தியாயர் -சி.சிவானந்தரத்தினம் -கனடா


காரைநகர் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் சைவத் தமிழ் பாடசாலையைஆரம்பித்து வைத்து காரைநகரில் பல பாடசாலைகள் உருவாவதற்கு காரணமாக இருந்த திரு. ச. அருணாசல உபாத்தியாயர் பற்றி காரைநகர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமான கடமையாகும்.

காரைநகர் வடக்கில் மல்லிகை குறிச்சியைச் சேர்ந்த சைவ வேளாளர் மரபில் உதித்த திரு. சிற்றம்பலம் சங்கரப்பிள்ளைக்கும் அவரது பாரியார் பண்புமிகு பத்தினி யம்மாவிற்கும் மகனாக 1864 ஒக்டோபர் 31ம் திகதி புத்திரராக பிறந்தார் திரு. அருணாசலம் அவர்கள். சைவ பழக்கவழக்கத்தையுடைய குடும்பத்தில் பிறந்து இறைபக்தியுடையவராக காணப்பட்டார்.

ஆரம்ப கல்வியை காரைநகர் களபூமி ஆலடியைச் சேர்ந்த அமெரிக்கன் மிசன் பாடசாலையில் கற்றார். இப்பாடசாலையே அன்று காரைநகரில் தோன்றிய முதல் பாடசாலையாகும். பின்னர் வண்ணார் பண்ணை சைவபிரகாச வித்தியாசாலையில் சிரேஸ்ட கல்வியை தொடர்ந்து படித்தார். அன்னார், தான் ஒருபயிற்றப்பட்ட ஆசிரியராக வரவேண்டும் என்ற இலட்சியம் கொண்டவராக தெல்லிப்பளை அமெரிக்கன் மிசன்போதனா பாடசாலையில் பயிற்சிக்கல்வியை தொடர்ந்தார். ஆனாலும் அவர் மதம் மாறி மற்றைய மாணவர்களைப்போல் ஞானஸ்தானம் பெற மறுத்தார். இதன் காரணமாக போதனா பாடாசாலை நிர்வாகத்தினர் பயிற்சி
தராதரப்பத்திரம் வழங்கவும், ஆசிரியர் நியமனம் வழங்கவும் முற்றுமுழுதாக மறுத்துவிட்டனர்.

இருந்த போதிலும் போதனா பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் தனது சொந்த கிராமமான காரைநகரில் திண்ணைப்பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து நடாத்தினார். நாளுக்கு நாள் பிள்ளைகளின் தொகை கூடிக்கொண்டு வந்தது. இந்நிலையில் சைவசீலர் திரு. கந்தப்பு சுப்பிரமணியம் அவர்களின் உதவியுடன் அயலில் உள்ள அவரின் காணியில் 1889ம் ஆண்டு ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். இதுவே காரைநகரில் அன்னார் திரு. ச.அருணாசல உபாத்தியாயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சைவத்தமிழ் பாடசாலையாகும். இதற்கு
சுப்பிரமணியம் வித்தியாசாலை என பெயர் சூட்டப்பட்டது. 1896ம் ஆண்டு இக்காணியை திரு.க. சுப்பிரமணிம் அவர்கள் பாடசாலைக்கு தருமசாதனம் செய்து கொடுத்தார். இப்பாடசாலையை நிர்வகிப்பதற்கு மூவர் கொண்ட
குழு நியமிக்கப்பட்டது. திரு.க.சுப்பிரமணியம், திரு.ச.அருணாசலம், பிரம்மஸ்ரீ கா.சிவசதம்பரஐயர் அவர்கள் நியமிக்கப்பட்டனர்.

தாய் மாமன் மகளான நாகமுத்தம்மாளை 1890ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குட்டிபுலத்தை(குமிழங்குளி இன்றைய சக்கலாவோடை) )வதிவிடமாகக் கொண்டு வதித்து வந்தார். இவர்களிற்கு சிவப்பிரகாசம்,சிவஞானம், சிவபாதம் ஆகிய மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர்.

களபூமியில் இருந்த அமெரிக்கன் மிசன் பாடசாலையை போன்று பின்னர் தங்கோடையிலும் ஆரம்பிக்கப்பட்டு அதனை சாமி பள்ளிக்கூடம் என மக்கள்அழைத்து வந்தனர். இதனை கண்ணுற்ற அருணாசல உபாத்தியாயர் சைவபிள்ளைகள் ஆங்கிலம் கற்க சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றையும் ஆரம்பிக்க எண்ணினார்.
அன்னார் சமய குரவர்களில் நம்பிக்கையும் பற்றும் உடையவர். எனவே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை என்ற பெயரில் 1890ம் ஆண்டு காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திரு.கோவிந்தர் அவர்களின் காணியில் ஆங்கில பாடசாலையை ஆரம்பித்தார். இதற்கு யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த திரு. முத்து சயம்பு ஆசிரியரை நியமித்து அவர் தலைமையில் மேற்படி பாடசாலை இயங்கியது.

காலப்போக்கில் அமெரிக்கன் மிசன் ஆங்கிலபாடசாலையிலும் பார்க்க மிகச் சிறப்பாக இயங்கி மென்மேலும் வளர்ச்சியுற்றது. காரைநகர் மக்களும் சயம்பு ஆசிரியரில் பற்று வைத்து சயம்பர் பள்ளிக்கூடம் என்றும் அழைக்கலாயினர்.

அருணாசல உபாத்தியாயர் அவர்களும் திரு. மு. சயம்பு ஆசிரியரில் பற்று வைத்து வலது கரமாக இருந்து இப்பாடசாலையை வளர்த்து வந்தார். காலப்போக்கில் இப்பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரியாகவும் பின்னர்ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலயமாகவும் பெயர் மாற்றிக்கொண்டது.அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்கள் 1890ம் ஆண்டு காரைநகர் வியாவில், காரைநகர் கருங்
காலி முருகமூர்த்தி கோயிலின் அர்ச்சகர் பிரம்ம ஸ்ரீ க.வேதக்குட்டி ஐயர் அவர்களின் காணியில் சைவபரிபாலன வித்தியாசாலை என்ற பெயரில் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். 1905ம் ஆண்டு அருணாசல உபாத்தியாயர் அவர்கள் இப்பாடசாலையில் ஆசிரியராக பணிபுரியத் தொடங்கினார். வேதக்குட்டி ஐயர் அவர்கள்
அருணாசல உபாத்தியாயரின் வலது கரமாக இருந்து செயற்பட்டு வந்தார்.
நீதி வெண்பா என்ற நூலில் 100 செய்யுட்கள் உண்டு. இதற்கு பதவுரை, பொளிப்புரை வெகு அழகாக எழுதி 1905ம் ஆண்டு அருணாசல உபாத்தியாயர் அவர்கள் வெளியிட்டார்.

1910ம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு.மா. வைத்தியநாதன் BSc. அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு.
சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகர் களபூமியில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு சைவசீலர் திரு.வள்ளி சுப்பிரமணியம் என்ற அன்பர் காணியை தருமசாதனம் செய்து கட்டிடத்தை நன்கு அமைத்து பாடசாலையை நல்ல முறையில் நிர்வாகம் செய்தார். பாடசாலையும் சிறப்புற விளங்கியது. மக்கள் இப்பாடசாலையை வள்ளி சுப்
பர் பள்ளிக்கூடம் என்று அழைத்தனர்.காரைநகர் இந்துக் கல்லூரியின் கிளையாக இலகடி தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்படியே சைவப் பாடசாலைகள் பல அருணாசல உபாத்தியாயர் இட்ட வித்தினால் அக்காலத்தில் ஆரம்பமாகின என்ற சொல்லலாம்.

1925ம் ஆண்டு காரைநகர் குமிழங்குளியைச் சேர்ந்த திரு.க.உமாபதி உபாத்தியாரால் காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்கு அண்மையில் மெய்கண்டான் தமிழ்;ப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்;டது.

1947ம் ஆண்டு மாசி மாதம் யாழ்ரன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரிக்கு உரிய காணியை தங்கோடையைச் சேர்ந்த மலாயன் பென்சனர் திரு.ஆ.கணபதிப்பிள்ளை அவர்கள் விலையாக வாங்கி பின்னர் அக் காணியை கல்லூரிக்கு தருமசாதனம் செய்தார். இக்கல்லூரி வளர்ச்சியடைய அமெரிக்கன் மிஷன் ஆங்கில பாடசாலை 1948ம் ஆண்டில் முற்றாக அழிந்துவிட்டது.

அமரர் அருணாசலம் அவர்கள் வெளியூர்களிற்கும் சென்று அவ்வ+ர்களில் உள்ள சைவப் பெரியார்களை ஊக்குவித்து சைவப்பாடசாலைகளைத் தோற்றுவித்தார். அன்னாரின் உள்ளத்தில் நெடுநாட்களாக சைவாசிரிய பயிற்சிக்கலாசாலை ஒன்றை தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்து இருந்தது.கீரிமலையில் கிருஷ்ணபிள்ளை மடத்தில் சைவாசிரிய பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்து அதனை அங்கீகரிக்க அரசினரை வேண்டினார், அரசினர் அதனை அங்கீகரிக்கவில்லை. பின்னர் வண்ணார் பண்ணை நாவலர்பாடசாலையை ஆரம்பித்து அதனையும் அரசினர் அங்கீகரிக்க மறுத்து விட்டனர்.கிறீஸ்தவர்களுடன் சேர்ந்து ஐக்கிய போதனா பாடசாலை நடாத்தினால் அங்கீகரிக்கலாம் என அரசினர் கூறினர்.
1913ம் ஆண்டு வைகாசி மாதம் அன்னாரது பாரியார் நாகமுத்தாள் சிவபதம் அடைந்தார்.அன்னாரது இலட்சியமான சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையின் எண்ணம் நிறைவேற கோப்பாயில் ஐக்கிய போதனா பாடசாலை கிட்டத்தட்ட 1916ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. 1923ம் ஆண்டு வரை நீடித்தது.சைவ மாணவர்களின் விடுதி கோப்பாய் திரு. மயில்வாகனம் அவர்களின் நாற்சார் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு அருணாசல உபாத்தியாயர் அவர்களே பொறுப்பாக இருந்து செவ்வனே நடத்தினார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பின் கிராமங்கள் தோறும் வப்பாடசாலைகள் தோன்றுவதற்கும் பயிற்சி பெற்ற சைவத் தமிழ் ஆசிரியர்கள் தோன்றுவதற்கும் அயராது உழைத்த உத்தமர் திரு.ச.அருணாசல உபாத்தியாயர் அவர்கள். அன்னார் 1920ம் ஆண்டு தை மாதம் 16ம் திகதி(16.01.1920) இரவு அன்னாரது காரைநகர்
குமிழங்குளி இல்லத்தில் உயிர் பிரிந்து இறைவன் அடி சேர்ந்தார். சிவபதம் அடையும் போது அன்னாருக்கு வயது 55. அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இலட்சியமான சைவாசிரிய பயிற்சிக்கலாசாலையை திரு.சு.இராசரத்தினம் அவர்கள் 1928ம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ஆரம்பித்தார். இதில் முதல்மாணவனாக அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இளைய மகன் சிவபாதம் சேர்க்கப்பட்டார். இவரே 1930ம்
ஆண்டு முதற் பயிற்சி பெற்ற சைவாசிரியனாக வெளியேறினார். இந்த சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில்; இருந்து ஆண்டு தோறும் பலர் பயிற்சி பெற்ற சைவாசிரியர்களாக வெளியேறினர். இவ்வாசிரிய பயிற்சிக்கலாசாலையில் காலஞ்சென்ற பண்டிதமணி திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியராகக் கடமையாற்றினார். 1950ம் ஆண்டளவில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரி சயம்பு சஞ்சிகையில் “அவர்களுக்குப் பின் அருணாசலம் தான்” என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தார். அவர்கள் என்பது ஆறுமுகநாவலரையே குறிப்பிடப்பட்டிருந்தது.

அமரர் ச.அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இலட்சியங்கள் மூன்று. அவையாவன சைவப்பாடசாலைகளைஆரம்பித்தல், பயிற்சி பெற்ற சைவாசிரியர்களை தோற்றுவித்தல், சைவப் பிரசாரங்களைப் பயிற்றுவித்து சமயத்தைப் பரப்புதல். அன்னார் இன்னும் சில காலம் உயிர் வாழ்ந்திருப்பாராகில் மிசனரிமார் எப்படி சமய போதகர்களை பயிற்றுவித்து கிராமங்கள் தோறும் சமயத்தை பரப்புகின்றார்களோ அதே போல் சைவசமயத்தையும் மக்கள் பின்பற்ற சிறப்புடன் சேவையாற்றியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

முற்றும்.

தீசன் திரவியநாதன்

'எனது ஊர் காரைநகர்"
கனடாவில் வெளியாகும் காலாண்டு
சஞ்சிகை உங்கள் வீட்டிற்கும்
இலவசமாக வந்தடையும். எதுவித
தயக்கமும்இன்றி உடனடியாக
அழையுங்கள்
416 821 8390

உங்கள் விலாசம் அல்லது
தொலைபேசி இலக்கத்தை
மின்அஞ்சலில் அனுப்பவும்.
உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
theesan@karainews.com
நன்றி!

More From Author

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரட்ணம்

காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது – யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர் மார்க்கண்டு வைத்தியநாதன் அவர்களின் இறுதி யாத்திரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *