பொதுச்சேவையை முன்னிறுத்தி மன்றம், சங்கம், ஒன்றிம் என்ற பெயர்களோடு பொது அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்களிடம் இருந்து சேவையை எதிர்பார்க்கும் பொது மக்கள் அந்த அமைப்புக்களிற்கு ஆதரவும், உதவியும் நல்கி வருகின்றார்களா?
கனடாவிலும் சரி, காரைநகரிலும் சரி இக்கேள்விக்கான பதில் இல்லையென்பதே. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட காரைநகர் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டகாரை மக்கள் வசித்து வரும் கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்த கால வரலாற்றிலும் சரி இன்றும் சரி அங்கத்தவர்களின் தொகை வருடம் ஒன்றிற்கு அண்ணளவாக 100 பேர்கள் மாத்திரமே இருந்து வருகின்றார்கள்.
அதே போன்று காரைநகரில் உள்ள பொது அமைப்புக்களை உற்று நோக்கினால் இந்தஅமைப்புக்கள் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும்படி பொதுமக்களை கேட்டதும் இல்லை அவர்களும் இணைந்து கொண்டதும் இல்லை. இதன் பிரகாரம் அவ்வமைப்புக்களிற்கு பொதுச்சபை என்ற ஒரு அமைப்பு இல்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளலாம்.
அங்கத்தவர்கள் இல்லாத ஒரு அமைப்பை யார் வேண்டுமானாலும் எந்த கொள்கைகளை முன்வைத்தும் ஆரம்பித்து நிர்வாகசபை உறுப்பினர்கள் மட்டும் கொண்ட அமைப்பாக ஆரம்பித்து ஊர் பெயரை சொல்லியும், மொழி, இனம், மதம் பெயர்களை சொல்லியும் நடாத்தலாம் என்பதனையும், அங்கத்தவர்களே இல்லாத அமைப்புக்கள் நிர்வாகசபையின் கொள்கைகளை மட்டும் நிறைவேற்றி முடிப்பதற்கு அதன்பெயரால் ஆயிரம் ஆயிரம் டொலர்களை பொதுச்சேவையென்ற பெயரில் விளம்பரங்கள் மூலமும் ஊர் அபிமானத்தின் பெயரிலும் பெற்றுக்கொண்டு தாம் நினைத்ததை நிறைவேற்றி முடிக்கும் அமைப்புக்கள் தான் கனடாவில் உள்ள ஊர்ச்சங்கங்கள் செய்து வருகின்றன.
அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முன்வர ஒரு ஊரைச்சேர்ந்த மக்கள் அதிகளவு முன்வரவில்லையென்றால் அந்த ஊரிற்காக ஒரு மன்றம் தேவையில்லை. அல்லது முதற்கண் அந்த மன்றத்திற்கு அங்கத்தவர்களை எவ்வாறு இணைத்துக்கொள்ளலாம் என்பது பற்றிய அடிப்படை சிந்தனையில் அந்த மன்றம் ஈடுபடவேண்டும்.
கவர்ச்சிகரமான விழாக்கள், கவர்ச்சிகரமான ஒன்றுகூடல்கள் மூலம் ஊரின் பெயரால் விழாநடாத்தி இந்த அமைப்புக்கள் கனடாவில் சாதித்துக்கொண்டவை என்னவோ பெரும்பாலும் பிரிவினைகளையே. கனடாவில் உள்ள அத்தனை ஊர் மன்றங்களிலும் பிரச்சனைகள்
பெருமளவில் இருக்கின்றன. காரணம் இந்த அமைப்புக்களில் அங்கத்தவர்கள் எண்ணிக் கையினை பார்த்தோமேயானால் வெறும் 50 தொடக்கம் 100 வரையானவர்களே. நிர்வாகசபைக்கு வருபவர்கள் தங்கள் திறமைகளை காட்டவும், அதன் மூலம் பெருமைகளை பெற்றுக்கொள்கின்றோம் என்ற வரட்டு நம்பிக்கையினாலும் மட்டுமே அத்தனை அமைப்புக்களையும் இயக்கி வருகின்றன.
ஒரு பொதுஅமைப்பு தமது ஊர் மக்களிற்காக சேவைசெய்கின்றோம் எனகூறுகின்றார்கள் என்றால் அந்த ஊர் மக்களின் ஆகக்குறைந்தது மூன்றில் ஒரு பகுதினராவது அங்கத்தவர்களாக இணைந்திருக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே பிரச்சனைகள் இல்லாத,பிரிவினையை உருவாக்காத பொதுச்சேவையினை செய்ய முடியும். அதற்கு கனடாவில் இரண்டு அமைப்புக்கள் உதாரணமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று பழைய மாணவர் சங்கம். ஒரு பாடசாலையில் படித்த அனைத்து ஊர் மக்களும் 500 மேல் அந்த பழைய மாணவர் சங்கத்தில் வருடா வருடம் அங்கத்துவ பணம் செலுத்தி அங்கத்தவராக இணைந்து கொள்கின்றார்கள். அந்த அமைப்பு மாபெரும் விழாவும், ஒன்றுகூடலும் நடாத்துகின்றது. அதன் மூலம்
வருடம் தோறும் ஒரு இலட்சம் டொலர்களிற்கு மேல் தங்கள் பாடசாலைக்கு உதவி வருகின்றார்கள். அறிவுள்ளவர்கள் அறிவார்கள் அது எந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்என்பதை.
கனடா காரை கலாச்சார மன்றம் கடந்த 20 வருடங்களில் கனடா வாழ் காரை மக்களிடம் அவ்வாறானதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியுள்ளது. 5 பேர் அங்கத்தவராக இருந்தாலும் 50 பேர் அங்கத்தவராக இருந்தாலும் நடக்கிறகாரியம் நடந்தேதான் ஆகின்றது.
50 பேர் அங்கத்தவராக உள்ள அமைப்பு ஒன்று அந்த அங்கத்தவர்களிற்கு மட்டுமே சேவையை வழங்க வேண்டும். அந்த 50 பேரிடம் இருந்து வருடத்திற்கு 5 டொலர் பெற்று அந்த ஊரிற்காக அனுப்பினாலே போதுமானது. ஆனால் கனடாவில் நடப்பது என்ன?
50 பேர் மட்டுமே அங்கத்தவர்கள். 500 பேர் விழாவிற்கு வருவார்கள், 1000 பேர் ஒன்றுகூடலுக்கு வருவார்கள். 11 பேர் நிர்வாக சபையில் இருந்து தங்கள் திறமையை காட்டுகின்றோம் பாருங்கள் என மாங்கு மாங்கு என உழைத்து சம்பந்தமே இல்லாமல் வருடத்திற்கு ஒரு இலட்சம் டொலர்கள் வரை வரவாக காட்டுகின்றார்கள். யாருக்காக இந்த மன்றம். யாருக்காக சேவை செய்கின்றோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். அங்கத்தவராக இணைந்து கொள்ள முன்வராத இவர்களிற்காகவா பொதுச்சேவை செய்கின்றீர்கள்?
வழியில் தேங்காயை எடுத்து இந்த தெருப்பிள்ளையார்களிற்கா உடைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்?ஏன் இந்த நிலமை? கனடாவில் காரைநகர் மக்கள் சில ஆயிரங்கள் மட்டுமே. இவர்களிற்கு கடந்த 20 வருடங்களாக இந்த மன்றத்தின் நம்பிக்கையையும் நாணயத்தையும் விளங்க
வைத்து அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ள முடியாவிட்டால் காரைநகர் மக்களிற்கு எதற்காக கனடாவில் மன்றம் தேவையாக உள்ளது.
நாலு அனுசரணையாளர்களிடம் ஊரின் பெயரை சொல்லி பெரியளவில் பணம் பெற்று இந்தஅங்கத்தவராக இணைந்து கொள்ள மறுக்கும் மக்களிற்காகவா பொதுச்சேவை செய்யவும்ஒற்றுமையை நிலைநாட்டுகின்றோம் என மாங்கு மாங்கு என உழைத்துக்கொண்டிருக்கின்றீர்
கள்?
தயவு செய்து கனடா காரை கலாச்சார மன்றம் ஊர் சேவை செய்வதற்காக எங்களிற்கு தேவையென கருதினால் உடனடியாக அங்கத்தவராக இணைந்து கொள்ளுங்கள்.
கனடா காரை கலாச்சார மன்றத்தில் கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி எந்தபிரிவினைவாதங்களும் இல்லை. இந்த இணையத்தளத்தின் தொகுப்பாளராகிய தீசன் திரவியநாதன் ஆகிய நான் இந்த மன்றத்தின் நிர்வாக சபையினருடன் என்றுமே வாக்குவாதப்பட்டதில்லை. இம்மன்றத்தின் செயற்பாடுகளிலும், பொதுக்கூட்டம், நிர்வாக சபை கூட்டங்களில் வாக்குவாதப்பட்டவர்கள் ஊரிற்காக பொதுச்சேவை செய்ய வந்தவர்கள் அல்ல. தங்கள் திறமைகளை காட்டி பெருமை பெறுகின்றோம் என நினைத்துக்கொண்டு ஊரை மறந்து சுயநலமாகவும், பொறாமையுடனும் செயற்பட்டவர்களே.
‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் நடப்பவற்றை தெரியப்படுத்துகின்றதேயன்றி, இம்மன்றத்தின் செயற்பாடுகளிற்கு குந்தகம் விழைவிற்கும் எந்த செயலிலும் ஈடுபட்டது இல்லை. சுயநலமாக மேடைபோட்டு பொதுக்கூட்டத்தில் பேசியபோதும், அவ்வப்போது பொக்கூட்டத்தில் தனிப்பட்டமுறையில் தீசனை எதிர்க்கின்றேன், கேட்கின்றேன் கேள்விகளை என வந்தவர்களும் கலையாடியவர்களின் முன்னால் மிகப்பெரும் பொறுமையுடனேயே கடந்த காலங்களில் நடந்து கொண்டுள்ளேன். அந்த வேளைகளில் கலையாடியவர்களுக்கு துணையாக நானும் சேர்ந்து கலையாடியிருந்தாலோ அன்றி கூட்டம் சேர்த்து அவர்களை தட்டிக்கேட்டிருந்தாலே இம்மன்றம் நான்குவருடங்களிற்கு முன்னர் கலைந்து போயிருக்கும்.
அங்கத்தவர்களாக சேர்ந்து கொள்ள மறுப்பவர்களும், கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு களியாட நினைப்பவர்களும், போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளிற்கு பரிசுகளை மட்டும் பெற்றுச்செல்ல வேண்டும் என நினைப்பவர்களும் சொல்லும் கண்மூடித்தனமான காரணம் ‘பிரச்சனைகளிற்கு நாங்கள் வரவில்லை’. எங்கே பிரச்சனை நடந்தது. எப்போது பிரச்சனை நடந்தது.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் செய்திகள் அப்பட்டமாக கடந்த மூன்றாண்டுகளாக இவ்விணையத்தளத்தில் வெளிவந்திருக்கின்றன. எங்கே பிரச்சனை நடந்தது? யார் யார் அடிபட்டார்கள்? அல்லது குத்துப்பட்டார்கள்? என நாம் செய்தி எடுத்து வந்திருக்கின்றோம். இதுவரை நாம் உண்மையைத்தான் எடுத்து வந்திருக்கின்றோம்…! அவற்றில் இருந்து நீங்கள்எங்கே பெற்றுக்கொண்டீர்கள் இந்த மன்றத்தில் சண்டையும் சச்சரவும் நடப்பதாக….?உங்கள் இயலாமையை மறைக்கவும், அங்கத்தவராக செலுத்தும் பணம் விரயம் என நினைத்தும் இவ்வாறான தவறான தப்பபிப்பிராயத்தை ஏன் பரப்பி வருகின்றீர்கள்…?
உண்மைகளை உணர்ந்து கொள்ள மறுக்கும் நீங்கள் ஒரு ஊரிற்குள் சேர்ந்து வாழ மறுத்தால் தமிழினம் எப்படி முன்னேற்றம் காணும்? அல்லது உங்கள் ஊரிற்காக உங்களால் அங்கத்தவராகவேனும் இணைந்து கொள்ள முன்வரவில்லையானால் யார் அதனை செய்யவேண்டும் என எதிர்பார்கின்றீர்கள்? எல்லாவற்றையும் ஓசியாகவே எதிர்பார்க்கின்றீர்களா? யாருக்காக மன்றம் என்பதனை தயவு செய்து கனடா வாழ் காரை மக்களே சிந்தியுங்கள்? மக்களிற்காக மன்றமா? அல்லது நிர்வாக சபைக்காக மன்றமா?
நிர்வாக சபைக்கு வருகின்ற அல்லது வரதுடிக்கின்ற கல்விமான்கள், அறிவுஜீவிகள் மக்கள்இல்லாத மன்றத்தையும், ஓசியில் எல்லாவற்றையும் எதிர்பார்க்கின்ற மக்களிற்கு அவர்கள்விரும்புவதை வழங்குவதும்தான் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.
நிர்வாக சபைக்கு தகுதியானவரை தேர்ந்தெடுங்கள். அரைத்தமாவையே திரும்ப அரைக்காத, இம்மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்களின் பின்னர் இம்மன்றம் எவ்வாறு மக்கள்மயப்பட்டதாக 500 பேர் அங்கத்தவராக இணைந்து கொள்ளக்கூடிய மன்றமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதற்கு தகுதியானவரை தேர்வு செய்யுங்கள்.
நிர்வாக சபையில் உள்ளவர்கள் 11 பேரும் ஆளுக்கு பத்து பேரிடம் அங்கத்தவராக இணைந்து கொள்ள விளக்கம் கொடுத்திருந்தாலே இன்று இந்த மன்றத்தில் 110 பேர்கள் அங்கத்தவராக இணைந்திருக்க வேண்டும். நடந்ததா? தட்டின கதவையே சேர்ந்து பதினொரு பேரும் திரும்ப திரும்ப தட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த இணையத்தளத்தில் வரும் செய்திகள் மருந்தாகவே கசக்கிறது பலருக்கும். இந்த இணையத்தளத்தில் தமிழ் எவ்வாறு எழுதப்படவேண்டும் என துடிக்கின்ற உங்களிற்கு நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணின் வலி தெரியவில்லை. இந்த இணையத்தளத்தின் மீதும் என் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் நான் ஊர்ப்பணி செய்வதாக கருதுகின்றீர்கள். நிச்சயமாக நான் ஊர்ப்பணி பொதுப்பணத்தில் செய்யவில்லை. பொதுப்பணத்தில் ஊர்ப்பணிசெய்பவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தினரே. உங்கள் பணமும், உங்கள் ஊர்ப்பற்றும் சிறந்த முறையில் வழிப்பட கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கு உங்களின் அபிமானத்தை காட்டுங்கள். அம்மன்றத்திற்கு சரி எது தவறு எது என்பதனை சுட்டிக்காட்டுங்கள். இந்தஇணையத்தளத்தில் தமிழ் இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்பதுதான் உண்மைகளை வெளிக்கொண்டு வர உண்மையான ஆதாரம்.
‘கனடா காரை கலாச்சார மன்றத்தில் 500 பேர்கள் அங்கத்தவராக இணைந்து கொண்டார்கள். கனடா காரை மக்கள் தம் ஊர் மண்ணின் பெருமைகளை உலகறிய எடுத்துரைக்கின்றார்கள், ஊரின் வளர்ச்சியிலே கனடா வாழ் காரை மக்களின் பணம் அதிகளவில் பயன்பெறுகின்றது என” எங்கள் ஊரின் பெருமைகளை இவ்வாறும் எழுத இந்த இணையத்தளம் காத்திருக்கின்றது.
உங்கள் விருப்பு வெறுப்புக்களை தெரியப்படுத்துங்கள். அதுவே நாம் வளர்ச்சியடைந்த, சுதந்திரமான நாட்டில் அறிவாளிகளாக வாழ்கின்றோம் என்பதற்கான ஆதாரம்.
நன்றி!