காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 1


மனவளம் நிறைந்த காரைநகர் மக்கள் பழமைக்கு பழமையாயும் புதுமைக்கு புதுமையாயும் தாம் பிறந்த பூமிக்கு புகழ் தேடித் தந்தார்கள். காரைநகரில் தோன்றி மறைந்து புகழ் சேர்த்த பெருமக்கள் வரிசையில் விளையாட்டுத் துறையில் ஈடுபட்
டோரும் உள்ளனர். பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை உடற்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு கல்விமுறையில் சிறப்பான வகிபாகத்தை உடற் கல்வி பெற்றுள்ளது. உடற்கல்வி மாணவர்களின் ஆளுமையை செம்மைப்படுத்தி,
செழுமைப்படுத்தி, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் கொடுக்கத் தேவைப்படும்பக்குவத்தையும், பயிற்சியையும் வழங்குகின்றது. மாணவர்களின் சமநிலை ஆளுமை வளர்ச்சியுற இது அத்திவாரமாக
அமைகின்றது. இளைஞர்களின் சிந்தனை செயல்கள், வழி தவறி செல்லாமல் மாலை வேளைகளில் பயன்தரு செயல்களில் ஈடுபட விளையாட்டு வழி அமைக்கின்றது. விளையாட்டில் ஈடுபடுவோர் உடல் வலிமை பெறல் மாத்திரமன்றி சகவீரர்களுடன் சேர்ந்துஇயங்கி தன் அணியின் வெற்றிக்கு உழைக்கும் மனப்பான்மை, மதிநுட்பத்துடன் செயற்படல், மனக்கலக்கம் இன்றி செயலை எதிர் கொள்ளல், கலக்கமற்ற வீரம் போன்ற நற்பண்புகளை உருவாக்கும் களமாக விளையாட்டு மைதானங்கள் திகழ்கின்றன.

நமது இளைஞர்கள் மாலை வேளைகளில் கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம், வியாவில் சைவ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களில் தரவை, சிதம்பரா மூர்த்தி கேணியடி, மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வீதி, சடையாளி, நீலிப்பந்தனைசனசமூக நிலையம், கேசடை வீதியில் உள்ள வயல்வெளி, வாரிவளவு கற்பக விநாயகர்வீதி, கோவளம் விளையாட்டு மைதானம், சிவகாமி அம்மன் கோவிலடி, வியாவில் சனசமூக நிலையம், தோப்புக்காடு போன்ற இடங்களில் விளையாட்டில் ஈடுபடுவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டில் உயர் அந்தஸ்தை பெற்று இருந்த ஆசிரியர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை (சிவன் கோவிலடி) அவர்களை தலைவராகக் கொண்டு தரவை யூனியன் THARAVAI  UNION என்ற பெயரில்உதைபந்தாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண காவல்துறை நீலன் காட்டில் முகாம் அமைத்திருந்த கடற்படையினர், ஆர்வமுள்ள ஏனைய பாடசாலைகளின் அணிகளும் உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்ற வரவேற்கப்பட்டனர். துடுப்பாட்டக் குழு அமைக்கப்பட்டாலும் ஆர்வத்
துடன் போட்டிகளில் பங்குபற்றவில்லை. இதனைத் தொடர்ந்து அ. சுந்தரம்பிள்ளை அவர்களின் தலைமையில் 1920களில் காரை விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. கெப்டன் தர்மரத்தினம் அவருடைய சகோதரர் கனகரத்தினம் (புது றோட்டு)
ஆகியோர் இப்பணியில் இணைந்து பணியாற்றினர்.

காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், மலாய் நாட்டில் சேவையாற்றி ஓய்வூதியம் பெற்று காரை நகரில் வாழ்ந்தவர்கள், காரைவாழ் வர்த்தகப் பெருமக்கள் கழகத்திற்கு பொருளுதவி வழங்கினர். இக்காலப்பகுதிகளில் தரவை மைதானம் விளையாட்டு நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. காரைநகரின் சகல குறிச்சி இளைஞர்களும் மாலை வேளைகளில் இங்கு வந்து சேருவர். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் இங்கு வந்து சேருவர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகள், கழகங்களுடன் காரை விளையாட்டுக் கழகம் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. 1933இல் சென்பற்றிக்ஸ் (St. Patrick’s  League) கழகத்தினரால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் கழகம் பங்கு கொண்டது.

யாழ் மாவட்ட உதைபந்தாட்ட தெரிவு அணியில் காரை விளையாட்டு கழக வீரர்கள் இடம் பெற்றனர். யாழ் மாவட்ட பிரபல பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணியில் காரைநகர் வீரர்கள் முன்னணியில் இருந்தனர். 1933– 1945ம் ஆண்டு காலப்பகுதியில் காரை விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாண உதை பந்தாட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. ஒரு காலகட்டத்தில் அமரர்கள் செல்வரத்தினம் (மாப்பாணவூரி) தர்மரத்தினம், கனகரத்தினம், (புது றோட்டு) சீவரத்தினம் (கோவளம்) நவரத்தினம் (மல்லிகை) காரை விளையாட்டுக் கழக உதை பந்தாட்ட அணியில் விளையாடியமையால் F.X.C. இரத்தினங்கள் அணி;; எனவும் அழைக்கப்பட்டது.

அமரர் கு.ஓ.ஊ. நடராஜா ஆகியோர் Fullback  நிலையில் விளையாடினார். அமரர் சண்முகம் சுந்தரசிவம் (மருதடி) யாழப்பாணஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் துடுப்பாட்ட வீரர் திரு. ஆறுமுகம் இரத்தினகோபால் (புது றோட்டு) 1954இல் சென்னை அணியுடன் போட்டியிட்ட யாழ் மாவட்ட அணித் தலைவர்,யாழ்ப்பாண விக்டோரியன் கழகத்தின் அணித் தலைவர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பயிற்றுனராக பத்து ஆண்டுகள் பணியாற்றி கல்லூரிக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்தவர். காரை இந்துக் கல்லூரி, காரை விளையாட்டுக் கழகம்,சோலையான் விளையாட்டுக் கழகம், கோவளம் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் பயிற்றுவிப்பாளர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் சிறப்பான இடத்தை வகித்தவர். திரு.யு.மு.நடராஜா (மாப்பாணவூரி) விக்டோரியின் அணியில் இடம் பெற்று Ceylon  Football   Association நடாத்திய போட்டிகளில் பங்குபற்றியவர்.

அமரர் செல்லப்பா சுப்பிரமணியம் (மருதடி) காரை விளையாட்டுக் கழகத்தின் சிறந்த முன்னணி வீரர். நொத்தாரிசு க.மு.தர்மராஜா சிறந்த கோல் காப்பாளர். அமரர் ஆ.குமாரசாமி உதைபந்தாட்ட போட்டிகள் ஓட்டப் போட்டிகளில் கல்லூரிக் காலங்களில் பங்குபற்றியவர். சென்னை Y.M.C.A  கல்லூரியில் உடற்கல்விப் பயிற்சிநெறி பயிலும் போது Y.M.C.A  அணியின்உதைபந்தாட்ட வீரர் காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறை ஆசிரியராக கடமை ஆற்றியவர். 1960களில் மலேசியாவில் இருந்து வருகை தந்த திரு. நல்லையா பொன்னையா(மாப்பாணவூரி) காரை விளையாட்டுக் கழகத்தை மீண்டும் இயக்கினார். கழகத்தின் செயற்பாடுகளுக்கு பொருளுதவி வழங்கி பலம் மிக்க உதைபந்தாட்ட அணியை உருவாக்கினார். கழகத்தின் உதைபந்தாட்ட அணித்தலைவராக இருந்து கழகத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்தார்.

1970களில் திரு. நவரத்தினம் தருமராஜா (மல்லிகை) பொருளுதவி வழங்கினார். திரு. தர்மராஜா உதைபந்தாட்ட,கரப்பந்து, துடுப்பாட்ட அணிகளுக்கு தலைமை தாங்கினார். இக்காலகட்டத்தில் கழகம் நெடுங்கேணி பிரிவுக்கு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக சுற்றுலாவை மேற்கொண்டது. 1979ஆம் ஆண்டு காரை விளையாட்டுக் கழகம் நிறுவனமயப்படு;த்தப்;பட்டது. கழகத்திற்கு நிருவாகம், வங்கிக்கணக்கு, இலச்சனை, கொடி, யேர்சி (JERSEY) என்பன உருவாக்கப்பட்டன. 20.10.1979இல் காரை விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான நிதியை உருவாக்குவதற்காக தீபாவளிச் சிறப்பிதழ் ஒன்று கலை நிகழ்வுகளுடனும் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதம அதிதி சட்டத்தரணி ந. சிறிகாந்தா அவர்களினால் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது. கழகத்தின் போஷகர்களாக காரை இந்துக் கல்லூரி, யாழ்ரன் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. அ. சோமஸ்கந்தன், திரு. அ.தியாகராஜா, வேதர் அடைப்பைச் சேர்ந்த கொழும்பு பிரபல வர்த்தகர் திரு. செ. பரம்சோதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இச்சிறப்பிதழ் வெளியிடுவதற்கான விளம்பரங்களை கழகத்தின் போஷகர் திரு. செ. பரம்சோதி பெற்றுத் தந்தமை குறிப்பிடத்தக்கது. 1970இன் பிற்பகுதிகளில் காரை விளையாட்டுக் கழகத்தின் மீள் எழுச்சியும், செயற்பாடுகளும் காரைநகரில் பல

விளையாட்டுக் கழகங்களின் தோற்றத்திற்கும், விளையாட்டு நிகழ்வுகள் சுறுசுறுப்பு அடையவும், காரணமாயிற்றுஇக்காலகட்டத்தில் காரைநகர் கழகங்களுக்கிடையே உதைபந்தாட்ட, கரப்பந்து, துடுப்பாட்ட போட்டிகள் ஆரோக்கியமான சூழலில் நடைபெற்றது. களபூமி சனசமூக நிலைய இளைஞர்கள் காரை விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து செயற்பட்டமை காரை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெறவும் ஸ்திரமான செயற்பாட்டிற்கும் உறுதுணையாயிற்று. 1980களில் காரைநகருக்கு ஒரு பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காரை விளையாட்டுக் கழகம் வலந்தலைச் சந்தியில் (தற்போது உதவி அரசாங்க அதிபர் பணிமனை, விவசாய விரிவாக்க பணிமனை, தொழிற்பயிற்சி நிலையம் உள்ள வளாகம்) தென் இந்தியா சிதம்பர தேவஸ்தானத்திற்கு உரித்தான காணியில் உள்ள ஒரு பகுதியை 99 ஆண்டுகளுக்கு தம்பிரான் சுவாமிகளிடம் குத்தகைக்கு பெற்று மைதானம் அமைக்க எடுத்த முயற்சிகள் பலன்அளிக்கவில்லை.

காரை விளையாட்டுக் கழகம், ஊர்காவற்துறை, அராலி, யாழ்ப்பாணம் பண்டதரிப்பு ஆகிய இடங்களில் நடாத்தப்பெற்ற சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றியது. அதே வேளை சிநேக பூர்வ போட்டிகளிலும் பங்கு பற்றியது ஊர்காவற்றுறை உதவி அரசாங்க பிரிவில் விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் க்ஷபாலா பிறதர்ஸ்; தீவுப் பகுதி கழகங்களுக்கிடையில் நடாத்திய போட்டிகளிலும் பங்குபற்றியது. க்ஷபாலா பிறதர்ஸ்; ஸ்தாபனத்தால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி க்ஷசீவலி டயறி; வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. வாரிவளவு நல்லியக்க சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 14 விளையாட்டு நிகழ்வுகளில் 13 வெற்றிக் கேடயங்களையும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் காரை விளையாட்டுக் கழக A, B அணிகள் பங்குபற்றி 1ம், 2ம் இடங்களையும் பெற்றது. தீபாவளி தினத்தன்று காரைநகர் கடற்படையும் காரை விளையாட்டுக் கழகமும் பங்குபற்றும் உதைபந்தாட்ட போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றது.

காரைநகரில் இயங்கும் விளையாட்டுக் கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களை கொண்ட அணி இக்காலத்தில் காரைநகருக்கு வெளியே நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும். 1991ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது காரை விளையாட்டுக் கழகம் அனைத்து உடமைகளையும் இழந்தமையும், அங்கத்தவர்கள் பல்வேறு இடங்களிலும் வாழ்கின்றமையும் காரை விளையாட்டுக்கழகத்தை செயற்படாநிலைக்கு தள்ளியது.


கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டிக்கு காரை விளையாட்டுக் கழகத்தால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக அமரர்களான விளையாட்டு வீரர்கள்; விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் ஞாபகார்த்தமாக
காரை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் அமரர்களான வீரர்கள் ஆர்வலர்களின் உறவினர்களால் 87,000/= பெறுமதியான சுழல் வெற்றிக் கேடயங்கள் பதினெட்டும் வீரர்களுக்கான இருபத்து மூன்று வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
அன்னார்களின் பங்களிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது. கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணிகளுக்கான (துநசளநல) 65,000/= பெறுமதியான யேர்சி வழங்கப்பட்டது. காரை விளையாட்டுக்
கழகத்தை இயக்குவதற்கான சிந்தனைகள் செயற்றிட்டங்கள் இருப்பினும் இயக்குவதில் சிரமங்கள் தென்படுகின்றன.

காரைநகர் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் காரை விளையாட்டுக் கழகத்திடம் இருப்பதால் எதிர்காலத்தில் பணிகள் ஆரம்பிக்கும் சாத்தியம் உண்டு. 1930 – 1937ஆம் ஆண்டு வரைக்கும் சித்திரை பாடசாலை விடுமுறை காலத்தில் அகில காரைநகர் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் காரைநகரின் சகல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களும் உயர்கல்விக்காக யாழ்நகரின் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்ற காரைவாழ் மாணவர்களும் மிக்க ஆர்வத்துடன் பங்குபற்றினர். இப்போட்டிகளை நடாத்துவதில் பெரும் பங்காற்றியவர் நடுத்தெருவைச் சேர்ந்த அமரர் திரு. நா. பொன்னம்பலம் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர். இவருடன் சேர்ந்து உழைத்தவர் மொறக்கோ சுப்பிரமணியம் எனப் போற்றப்பட்டு வந்த களபூமி மு.மு.சுப்பிரமணியம் அப்புக்காத்தர் திரு. நா. பொன்னம்பலம் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முதற் செயலாளர். அரச சேவையில் எழுதுவினைஞராக சேர்ந்து கணக்காளராகக் பதவி உயர்வு பெற்றவர்.

தோப்புக்காடு விளையாட்டுக் கழகம்

தோப்புக்காடு கிராமத்தில் பல குழுக்களாக விளையாட்டில் ஈடுபட்டு இருந்த இளைஞர்கள் தமது கிராமத்து விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 30.11.1979இல் தோப்புக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தை ஆரம்பித்தனர். நாளடைவில் ஆர்வலர்கள் சமூகப் பிரதிநிதிகள், பெண்களை கழகத்தில் இணைத்துக் கொள்வதற்காக தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் என மாற்றமடைந்தது. ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடாத்தப் பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியது. இப்பிரிவில் எல்லே விளையாட்டு நிகழ்விற்கான வெற்றிக் கேடயத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது. இக்காலப்பகுதியில் காரைநகரில் இயங்கிய விளையாட்டுக் கழகங்கள், கடற்படை அணி, இலங்கை போக்குவரத்துச் சபை அணிகளுடன் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டது. காரைநகர் தெரிவு அணியிலும் தோப்புக்காடு விளையாட்டுக் கழக வீரர் இடம் பெற்றனர். 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இப்பிரதேச மக்கள் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுதுவலிகாமம் மேற்குப் பிரிவில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிக் கேடயங்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும் யாழ் மாவட்ட முன்னணி விளையாட்டுக் கழகங்கள் திருமலை நட்சத்திர விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுடன்; உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றினர். தோப்புக்காடு கிராமத்தினர் மீளக்குடியமர்ந்த பின்னர் காரைநகர் உதவி அரசாங்க பிரிவினால் நடாத்தப் பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி பரிசில்களை பெற்றுள்ளனர். இக்கிராம மக்கள் உறுதியான வாழ்வாதாரமின்றி தம் வாழ்க்கையை நடாத்திக் கொண்டு இருக்கிறார்கள். தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் ஊக்குவிக்கப்டுமிடத்து தரமான வீரர்களை உருவாக்கும்.

சோலையான் விளையாட்டுக் கழகம்

வேதர் அடைப்பு, வடகாடு, அல்லின் வீதி போன்ற குறிச்சிகளில் வசித்த விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவித்து விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தும் நோக்குடன் 1981ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் திரு. மு.ஊ. கந்தசாமி (இ.போ.ச காரைநகர் சாலை முகாமையாளர்) எடுத்துக் கொண்ட பயனுறு முயற்சியால் உருவாக்கப்பட்டது. கழகத்தை உருவாக்குவதிலும், வளர்ச்சியிலும், பயிற்சி வழங்குவதிலும் விளையாட்டு வீரர் அமரர் ஆ. இரத்தினகோபால் பேராசிரியர் வே.
இராமகிருஸ்ணன், அமரர் திரு. ஆ. கனகசபை, திரு. த. துரைசாமி (ஆசிரியர்) ஆகியோர் பங்குபற்றினர். சோலையான் விளையாட்டுக் கழகம் இயங்கிய பிரதேச மக்கள் உணர்வுபூர்வமாக வழங்கிய ஒத்துழைப்பு கழகம் மிகக் குறுகிய காலத்தில்
மிகப் பெரிய வெற்றிகளை அடையக் காரணமாயிற்று. 1981ம் ஆண்டு மார்ச் மாதம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் கழகம் 1ஆம் இடத்தை ஆண்கள் பெண்கள் பிரிவில் பெற்று வெற்றிக் கேடயத்தை பெற்றுக் கொண்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 1ஆம் இடத்தை தனதாக்கி கொண்டது. 1989ஆம் ஆண்டு சித்திரை 15ஆம் நாள் ஆண்டு விழாவை கழக மைதானத்தில்
வெகு விமரிசையாக கொண்டாடியது. இவ்விழாவில் காரைநகரில் செயற்பட்ட அனைத்து விளையாட்டுக் கழகங்களும் பங்குபற்றின. கழகத்தின் ஆரம்பக் காலத்தில் திரு. ளு. செல்வச்சந்திரன், திரு. ளு. தேவராஜா, திரு. ளு. நடராஜா, திரு. வே.
குலானந்தராசா, பொ. சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கழகத்தின் ஆரம்பகால வெற்றிகளுக்காக உழைத்தவர்கள். திரு.செல்லையா ஞானேஸ்வரன் (ஞானி – வேதர் அடைப்பு) யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற
மெய்வல்லுநர் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்று சாதனை ஏற்படுத்தியதுடன் தேசிய மட்ட போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றார். மீள்குடியேற்றத்தின் பின் திரு. மு.ஊ. கந்தசாமியின் முயற்சியின் பெறுபேறாக 1997, 1998, 1999ம் ஆண்டு காலப்பகுதிகளில் கழகம் வெற்றிகளை பெற்றுக் கொண்டது. இக்காலகட்டத்தில் கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு. அ. ஜெகதீஸ்வரனின் பயிற்சியும் வழிகாட்டலும் பாராட்டுக்குரியது எனக் குறிப்பிடுகிறார் திரு. மு. ஊ. கந்தசாமி.

கோவளம் விளையாட்டுக் கழகம்

விளையாட்டுத் துறையில் ஆற்றலும், ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்த கோவளம் இளைஞர் மன்றம் என்ற ஓர் அமைப்பு ரீதியாக 1981இல் இருந்து செயற்பட ஆரம்பித்தனர். கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒரு பகுதியில் வாசிகசாலை நூல்நிலையம் என்பவற்றை ஆரம்பித்ததோடு மெலிஞ்சியோடை மைதானத்தை தமது விளையாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினர். 1981ல் ஒரு விளையாட்டு போட்டியை நடாத்தியது. 1982இலிருந்து பச்சை, சிவப்பு இல்லங்களை அமைத்து 20 – 40, 40 – 50, 50இற்கு மேல் எனப் பிரித்து விளையாட்டு போட்டிகளை நடத்தினர். 1990 வரை இப்போட்டிகள் கோவளத்திற்கு அண்மையிலுள்ள குறிச்சி மக்களின் போராதரவுடன் நடைபெற்றன. விளையாட்டு போட்டிக்கு ஊர் மக்கள் வயது வேறுபாடின்றி திரண்டிருப்பர். ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடைபெறும் போட்டிகளில் கழக வீரர்கள் பங்குபற்றி சாதனை நிகழ்த்தி உள்ளனர். 1982, 1983ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடாத்தப் பெற்ற மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை பெற்று பத்திரிகைகளினதும், விளையாட்டுதுறை அபிமானிகளினதும் பாராட்டையும் பெற்றது. வாரிவளவு நல்லியக்க சபையினால் நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக் கேடயத்தை பலமுறை பெற்றுக் கொண்ட கோவளம் இளைஞர் மன்றம் வன்பந்து துடுப்பாட்டத்திலும் ஈடுபட்டு வந்தது. மாவட்ட ரீதியில் உதவி அரசாங்க
அதிபர் பிரிவு ரீதியில் நடைபெறும் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற போட்டிகளில் கழகம் பங்குபற்றி வெற்றிக் கேடயங்களை பெற்றுக் கொண்டது.

காரை விளையாட்டுக் கழகத்துடன் நடைபெறும் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பானதும் உணர்வு பூர்வமானதுமாகும்.காரைநகரில் அமைந்துள்ள கடற்படை அணியுடனும் 1981, 1982 ம் ஆண்டு காலப்பகுதியில் காற்பந்தாட்டப் போட்டியில்
பங்குபற்றியது. கோவளம் இளைஞர் கழகத்தின் வெற்றியில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் தனது பள்ளிப் பருவத்தில் விளையாட்டுத்துறையில் நன்கு பிரகாசித்து, பின்னர், அக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியராக சேவையாற்றிய திரு. த.
சிவகுமாரின் வழிகாட்டலும் அனுபவமும் கோவளம் இளைஞர் மன்றம் ஆற்றல் மிக்கதாக வளர்ச்சியுற காரணமாக அமைந்தது. திரு. செல்வரத்தினம் நீதிபதி மார்க் ஓடுகள் உரிமையாளர், திரு. வே. பரஞ்சோதி, திரு. சு. தவராசன், திரு. சு.
உருத்திரசிங்கம முதலான கோவளம் வர்த்தகப் பெருமக்களின் அனுசரணையும் உற்சாகமும் குறிப்பிடத்தக்கது. திரு. அ. தியாகராஜா திரு. ளு. சேனாதிராஜா, திரு. ீ. பொன்னுசாமி ஆகியேர்களின் வழிகாட்டல் மேலும் உதவியாக அமைந்தது. சகல விளையாட்டு நிகழ்வுகளிலும் ஈடுபடும் திறமை கொண்ட அணியினர் கழகத்தின் வெற்றிகளுக்கு காரணமாயினர். திரு. த. சிவகுமாரன், திரு. த. சிவபாலன், திரு. தி.சிவகணேசன், திரு. தி.சிவசோதி, செ.ஞானசோதி, அ.சர்வேஸ்வரன், ப. நந்தகுமாரன், சி. இந்திரன், சி. ரவீந்தின், த. கண்ணன், இ. இரவீந்திரன், இ. சுரேந்திரன் ஆகியோர்
ஆவர்.

களபூமி சனசமூக நிலையம்

1970இன் இறுதிப் பகுதியில் 33ஆவது ஆண்டு விழாவை கொண்டாடியது. வீதி ஓட்டப் போட்டிகள், சைக்கிள் ஓட்டப் போட்டிகள், காரைநகர் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் என இரண்டு வாரங்களாகக் கொண்டாட்டம்
நீடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஊர்காவற்றுறை மக்கள் வங்கி முகாமையாளர் திரு. கதிர்வேலாயுதபிள்ளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவின் இறுதியில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

வாரிவளவு நல்லியக்க சபை

பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை உடற்கல்வி என்பதை காரைநகரில் நடைமுறைப்படுத்தியவர் வாரிவளவு நல்லியக்க சபை செயலாளர் திரு. சி. பத்மநாதன் (பட்டுமாமா) பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்
கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க 14 வகையான விளையாட்டு நிகழ்வுகள், காரைநகர் கடற்படையின் ஆதரவுடன் நீச்சல் போட்டி என்பனவற்றை சித்திரை மாதங்களில் நடாத்தி சித்திரை வருடப் பிறப்பை
குதூகலமாக கொண்டாட காரைநகர் மக்கள் அனைவரையும் வாரிவளவிற்கு வரைவழைப்பார். அன்னாரின் கல்வி செயற்பாட்டினால் காரைநகர் பண்டத்தரிப்பு கல்விக் கோட்டத்துடன் இணைந்திருந்த காலத்தில் கோட்டத்தில் 25 மாணவர்கள் ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய போது 12 மாணவர்கள் காரைநகரில் சித்தி எய்துவது வழமை. வாரிவளவு நல்லியக்க சபையின் வெற்றிடம் இப்பொழுது உணரப்படும் என நம்புகின்றேன். வாரிவளவு நல்லியக்க சபையை அமரர் பத்மநாதன் நிருவாக முறையில் மீண்டும் ஆரம்பிப்பது காலத்தின் தேவை. தற்போது காரைநகரில் செயற்படும் விளையாட்டுக் கழகங்கள் 1996ம் ஆண்டு மீளக்குடியமர்ந்த பின்பு ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையான தடகளப் போட்டியில் சோலையான் விளையாட்டுக் கழகம் காரைநகர் பிரதேச விளையாட்டு வீரர்களை உள்ளடக்கி அந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பிரதேச வெற்றிக் கேடயத்தை தனதாக்கி வெற்றியீட்டியது. 1997, 1998, 1999ஆம்
காலப்பகுதியில் பின்வரும் கழகங்கள் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றின.

 கலைத் தென்றல்   :- கல்லாந்தாழ்வு பகுதி J/40
 சிவகௌரி        :- பெரியமணல் J/40
 இளம்சோலை      :- கல்லின் வீதி J/46
 இளம் சுடர்       :-
 ஒளிச்சுடர்        :- காரை மத்தி J/48
 கோவளம் விளையாட்டுகழகம்        :- J/41
 இளம் தென்றல் விளையாட்டுக் கழகம்        
 தோப்புக்காடு விளையாட்டுக் கழகம்     :- J/44
 அம்பாள் விளையாட்டுக் கழகம்        :-  ஊரி J/42
 துள்ளுமீன் விளையாட்டுக் கழகம்      :-  மருதபுரம் J/45
 கலாநிதி விளையாட்டுக் கழகம்        :-  வலந்தலை J/47
 நல்ல நண்பர்கள் விளையாட்டுக் கழகம்  :-  மருதடி

2003ஆம் ஆண்டு காரைநகர் தனியான உதவி அரசாங்க பிரிவாக பிரிக்கப்பட்டதன் பின்னர் இக்கழகங்கள் இப்பிரிவின் கீழ் பதிவு செய்து செயற்பட்டன. பின்பு நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் இவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய
ஆரம்பித்துவிட்டன. 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விளையாட்டுக் கழகங்களாகப் பின்வருவன செயல்படுகின்றன.

 1.  ஒளிச்சுடர் விளையாட்டுக் கழகம்
 2.  கோவளம் விளையாட்டுக் கழகம்
 3.  இளம் தென்றல் விளையாட்டுக் கழகம்
 4.  தோப்புக்காடு விளையாட்டுக் கழகம்
 5.  அம்பாள் விளையாட்டுக் கழகம்
 6.  கலாநிதி விளையாட்டுக் கழகம்
 7.  நல்ல நண்பர்கள்  விளையாட்டுக் கழகம்

2011 ஆண்டிற்கான பிரதேச மட்ட தடகளப் போட்டியில் இக்கழகங்கள் பங்குபற்றின. இதில் கலாநிதி விளையாட்டுக்கழகம் வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. 2011ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பு தினத்தன்று விளையாட்டுக் கழகத்தினர் கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் புத்தாண்டை பொங்கல் பொங்கி கொண்டாடினர்.

தீசன் திரவியநாதன்

'எனது ஊர் காரைநகர்"
கனடாவில் வெளியாகும் காலாண்டு
சஞ்சிகை உங்கள் வீட்டிற்கும்
இலவசமாக வந்தடையும். எதுவித
தயக்கமும்இன்றி உடனடியாக
அழையுங்கள்
416 821 8390

உங்கள் விலாசம் அல்லது
தொலைபேசி இலக்கத்தை
மின்அஞ்சலில் அனுப்பவும்.
உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
theesan@karainews.com
நன்றி!

More From Author

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2013

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *