காரைநகரின் வடமேற்குப்பகுதியில் கோவளம் என்ற இடத்தின் கடற்கரையோரமாக அமைந்துள்ளது காரைநகர் வெளிச்சவீடு. இது கப்பல்களுக்கும் வள்ளங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. இது 1916 ம் ஆண்டு கட்டப்பட்டது. வெண்மை நிறத்தில் கம்பீரமாக தோன்றும் இதன் உயரம் அண்ணளவாக 100 அடிகளாகும்.










இது சதுரவடிவான அடித்தளத்தின் மீது உருளை போன்ற பகுதியைக்கொண்டுள்ளது. இதன் உச்சியை சென்றடைவதற்கு இரும்பினாலான பல ஏணிகள் உட்பகுதியில் அமைந்திருக்கின்றன. இதன் உச்சியில் சுற்றிலும் கண்ணாடியாலான விளக்குப்பகுதி காணப்படுகிறது. இதனுள் ஒரு பாரிய விளக்கு காணப்படுகிறது. இவ் விளக்கு எரிவாயு மூலம் ஒளிர்விட்டப்பட்டது. இதற்கான சிலிண்டர்கள் அடித்தளத்தில் உள்ள அறையில் பொருத்தப்பட்டிருந்தன. இதிலிருந்து நீண்ட குழாய்மூலம் மேல் உள்ள விளக்கிற்கு வாயு கொண்டுசெல்லப்பட்டது. மின்வினையோகம் இன்றி எரிவாயுவினால் அக்காலத்திலிருந்த தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இது செயற்பட்டது. இவ் விளக்கானது பல முக்கோணவடிவ கண்ணாடி அரியங்களால்அமைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் பலமைல்கள் தூரம் பிரகாசிக்கக்கூடிய நீண்ட ஒளிக்கற்றை ஏற்படுத்தப்பட்டது.
ஊச்சியில் வெளிப்பக்கமாக நின்று கடலை அவதானிக்கக்கூடியதாக பலகணி போன்ற சுற்றுவட்ட அமைப்பு காணப்படுகிறது. இதில் நின்று ஊர் முழுவதையும் பார்க்கலாம். இக்கலங்கரைவிளக்கமானது இரவில் மாத்திரம் ஒளிரக்கூடியவாறு தானியங்கி முறை பொருத்தப்பட்டிருந்தது. இது இருமுறை அடுத்தடுத்து ஒளிரும். ஒரு சிறிய இடைவெளியின் பின்பு மீண்டும் இருமுறை ஒளிரும். இவ்வாறு தொடர்ந்து பல நூறு இரவுகளாக பல வருடங்களாக ஒளிர்ந்தது. அந்த இரவுகளில் நாம் இதை பல தடவைகள் பார்த்து வியந்தோம். ஆசிரியர்களும் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து இது செயற்படும் முறையைக் காண்பித்தனர். தற்பொழுது இது சேதமடைந்து காணப்படுகின்றது.
(தயா)