திரு.சி.சிவானந்தரத்தினம் ஆயிலி, காரைநகர்
சைவமும், செந்தமிழும், பண்பாடும் தழைத்தோங்கும் காரைநகரில் தங்கோடை கிராமத்தை சேர்ந்த திரு.சண்முகம் ஆறுமுகம், துணைவியார் அமிர்தவல்லி ஆகியோரிற்கு கனிஷ்ட புத்திரனாக கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் 1916ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி மலேசியாவில் பிறந்தார். இவரது தமையனார் பரஞ்சோதி, சகோதரிகள் பாலாம்பிகை, சரஸ்வதி ஆகியோராவர். அனைவரும் மலேசியாவில் வசித்து வந்தார்கள். திரு. தியாகராசா அவர்கள் தனது ஆரம்பகல்வி, உயர்கல்வியை மலேசியாவில் கற்றார். அதனைத் தொடர்ந்த சீனியர் கேம்பிறிச் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்தார்.
இவரது கல்வியார்வம் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரியாக வரவேண்டும் என்பதாகும். அதன் காரணமாக இவரது பெற்றோர் சென்னை பல்பலைக்கழகத்தில் சேர்த்து படிப்பித்தனர். B.A பட்டதாரியாக கலைப்பிரிவில் சித்தியடைந்தார். அதனைத் தொடர்ந்து முதுமானிப்பட்டம்(M.A) பட்டதாரியானார். அதன் பின்னர் இலக்கியத்தில் முதுமானிப்பட்டம்(M.Lit.) பெற்றார். பொருளாதாரம், புவியியல், இலக்கியம் ஆகிய மூன்று பாடங்களிலும் பரந்த அறிவையும் கற்பித்தல்
திறமையும் பெற்றிருந்தார்.



இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் பல அகிம்சைப் போராட்டங்களை பிரித்தானிய அரசிற்கு எதிராக நடாத்திக் கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் உற்று நோக்கிய தியாகராசாவிற்கு இந்திய தேசிய தலைவர்களிடம் பற்றுதல் உண்டாகிவிட்டது. இதுவே பிற்காலத்தில் அன்னார் அரசியலில் ஈடபடவும் சமூகசேவைகளில் இறங்கி நாட்டிற்காகவும், சொந்த கிராமத்தை முன்னேற்றப்
பாதைகளில் இட்டுச்செல்லவும் வழி வகுத்தது.
இந்தியாவில் பல்கலைக்கழக படிப்பு முடிந்ததும் பெற்றோரிடம் மலேசியா சென்றார். கல்வி கற்றலில் சிறந்து விளங்கிய தியாகராசா அவர்கள் தான் கற்ற கல்வியின் மூலம் ஆசிரியத் தொழிலை மேற்கொள்ள தீர்மானி;த்தார். திரு.தியாகராசா அவர்களின் சிறிய தந்தையார் திரு.ச.
வைத்திலிங்கம் அவர்கள் மலேசியாவில் அரச சேவையில் இருந்து இளைப்பாறி தங்கோடையில் வசித்து வந்தார். திரு. வைத்திலிங்கம் அவர்கள் தனது தமையனார் மகனை அரவணைத்து தமது இல்லத்தில் இருப்பிட வசதி அளித்து பராமரித்து வந்தார். தியாகராசா அவர்கள் தனது
கிராமத்தின் நிலமையை உணர்ந்து கொண்டு தனது ஆசிரியத் தொழிலுக்கு தனது சொந்த மண்ணில் சேவை செய்வதே சிறந்தது என உணர்ந்து கொண்டார். காரைநகர் இந்துக் கல்லூரியில் 1942ம் ஆண்டு முதல் உதவி ஆசிரியராக தொழிலை மேற்கொண்டார்.
திரு.வைத்திலிங்கம் அவர்கள் குடும்ப பாரம் உடையவர். இந்;நிலையில் இலகுவாக போக்குவரத்து செய்ய வசதிக்காக ஆலடி சந்திக்கு அண்மையில் வசிக்கும் தனது சகோதரி சின்னக்குட்டி இல்லத்தில் இருப்பிட வசதியை தியாகராசா அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். சின்னக்குட்டி எட்டியாந்தோட்டை பிரபல வரத்தகர் திரு.கே.எஸ்.சிவகுருநாதன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார். இவர்கள் பெருநிதி உடையவர்களாக விளங்கினார்கள். சிவகுருநாதன் சின்னக்குட்டி தம்பதியர்களுக்கு கணேசபிள்ளை, நடராசர் ஆகிய இரண்டு ஆண்பிள்ளைகளும். மகேஸ்வரி என்ற மகளும் இருந்தனர். செல்வி மகேஸ்வரி தியாகராசாவிற்குச் சொந்த மைத்துனியும் ஆவார். 1945ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
1946ம் ஆண்டு தொடக்கம் தந்தையாரால் கட்டுவிக்கப்பட்ட ஆயிலி முச்சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இல்லத்தில் நிரந்தரமாகக் குடியேறி இல்லற வாழ்க்கையை இனிது சிறப்புற வாழ்ந்து வந்தார். திரு.தியாகராசா மகேஸ்வரி தம்பதிகளுக்கு ஞானசம்பந்தன், வேணுகோபால் ஆகிய இரண்டு புதல்வர்களும், திலகவதி. புனிதவதி. மங்கையற்கரசி ஆகிய மூன்று புதல்விகளும் உண்டு.
திரு.தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராக 16.01.1946ம் ஆண்டு கடமையேற்றார். 1946ம் ஆண்டின் முதலாம் தவணை ஆரம்ப தினமும் அதுவே ஆகும் என்பது குறி;ப்பிடத்தக்கது. இவர் கல்லூரிக்கு அதிபரான பின்னர் இரசாயண, பௌதீக, தாவர, மிருக சாத்
திர ஆய்வுகூடங்கள் நிறுவப்பட்டன. நூல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் நிர்மானிக்கப்ட்டன. கல்லூரி சகல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் நோக்கமும் அறவே அவரிடம் இருந்தது இல்லை. கல்லூரியின் வளர்ச்
சியையும் ஊரின் நிலமைகளிற்காகவுமே அவரது உழைப்பும் சிந்தனையும் இருந்து வந்தது.
1946ம் ஆண்டு தமிழ்நாடு திருமுருக கிருபானந்தவாரியாரை அழைத்து மாணவ மாணவியருக்கு சைவசமய பிரசங்கம் செய்வித்த பெருமை அன்னாரையே சாரும். அந்த காலகட்டத்தில் இக்கட்
டுரையை எழுதிவரும் நான் மாணவனாக இருந்தேன் (சி.சிவானந்தரத்தினம்).
காரைநகர் களபூமியை சேர்ந்த நீதியரசர்(Supreme Court Judge) அமரர் திரு.ந.நடராசா K.C அவர்களின் ஞாபகார்தமாக அன்னாரின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி தங்கம்மா நடராசா அவர்கள் ‘நடராசா ஞாபகர்த்த மண்டபம்’ கட்டுவித்தார். அப்பொழுது காரைநகர் இந்துக் கல்லூரி தனது அறுபதாம் ஆண்டு நிறைவை அடைந்தது. கல்லூரியின் வைரவிழாவை கொண்டாடுவதற்கு பொருத்தமாக குறித்த ஞாபகர்த மண்டபத்தையும் அதனோடு சேர்ந்த காணியையும் திருமதி. தங்கம்மா நடராசாவைக் கொண்டு கல்லூரிக்கு தருமசாதனம் செய்வித்துக்கொண்டார் திரு.ஆ.தியாகராசா அவர்கள்.
1950ம் ஆண்டு கல்லூரி வைரவிழாவின் போது மேற்படி மண்டபம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் கௌரவ லலிதா இராசபக்ச அவர்களால் திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இலங்கை பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் Sir Ivor Jennings அவர்களால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. வைரவிழாவின் ஞாபகர்த்தமாக ‘சயம்பு’ என்ற தலைப்பில் ஓர் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இவை யாவும் அன்னாரின் பெரும் முயற்சிகளாகும்.
கல்லூரியில் அதிபராக சிறப்பாக பணியாற்றி வந்த பொழுதும் அரசியலில் சேர்ந்து ஊருக்கும் நாட்டுக்கும் மிகப்பெரும் சேவைசெய்யலாம் என்ற எண்ணம் அவருக்குள் எப்போதும் இருந்து வந்துள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் மீது மிகுந்த பற்று உடையவர். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களிடம் நம்பிக்கையும் பாசமும் உடையவர். விடுமுறை காலங்களில் இந்தியா சென்று தலைவர்களுடன் பழகுவார். சுதந்திர வேட்கையுடையவர். 1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோல்பரி ஆணைக்குழுவினர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் பல அமர்வுகளை நடாத்தி
அபிப்பிராயங்கள் கோரினர். அக்குழுவினர் முன்னிலையில் சாட்சியமும் அளித்தார். திரு.ஆ.
தியாகராசா அவர்களின் பெயர் சோல்பரி ஆனைக்குழுவினரின் அறிக்கையில் 60வது பக்கத்தில்
இடம்பெற்றுள்ளது. அப்பொழுது காரைநகர் இந்துக் கல்லூரியில் உதவி ஆசிரியராகவே கடமையாற்றிவந்தார். இதுவே பிற்காலத்தில் செயல் வீரனாகவும் அரசியல் ஞானம்
உடையவராகவும் நாட்டின் பொழுளாதாரத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைக்க முன்வர தூண்டியது.
1952ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் சுயேட்சை அபேட்சகராக ஊர்காவற்றுறை தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் ஐந்து அபேட்சகர்கள் போட்டியிட்டனர். திரு.அல்பிரட் தம்பிஐயா, திரு.ஆ.தியாகராசா, திரு.க.அம்பலவாணர், திரு.சி.அமரசிங்கம், திரு. சோ. சேனாதிராசா ஆகியோராவர். திரு.ஆ.தியாகராசா அவர்கள் இரண்டாம் இடத்தில் அதிகூடிய இடத்தைப் பெற்றார். அவரது அரசியல் கொள்கை சோசலிச கொள்கையாகும்.
திரு.ஆ.தியாகராசா அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் காரைநகர் முன்னேற்றத்திற்காகவும் அயராது தொடர்ந்து உழைத்தார். காரைநகர் அக்காலத்தில் 14 வட்டாரங்களைக் கொண்ட சபையாகும். தனது சொந்த வட்டாரமான 4ம் வட்டார அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். பல முன்னேற்றத்திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தியும் இருந்தார். அத்துடன் காரைநகர் சைவமகா சபையிலும் தலைமைப் பதவியேற்று சிறந்தசேவைகளைச் செய்தார்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். நடராசா ஞாபகர்த்த மண்டபத்திற்கும், காரைநகர் வைத்தியசாலைக்கும் தென்பக்கமாக இருந்த விசாலமான காணியை காணி உரிமையாளரிடம் இருந்து நன்கொடையாகப் பெற்று கல்லூரிக்கு தருமசாசனம் செய்வித்து விளையாட்டு மைதானமாக மாற்றியமைத்தார். இதிலிருந்து அன்னாரின் சேவை மனப்பான்மையை நன்கு உணரலாம்.
1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் கட்சி அபேட்சகராகப் போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களைத் தோற்கடித்து வட்டுக்கோட்டைத் தொகுதி பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இக்காலத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் இருந்து பல பாடசாலைகளுக்குக் கட்டிட வசதிகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் அமைத்துக் கொடுத்தார்.
காரைநகருக்கு மின்சார வசதி, குடிநீர் குழாய் நீர் விநியோகம் ஆகியவற்றை மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுத்தார். காரைநகர் சிவன் கோயில் வீதி(புதுறோட்), கோவளம் வெளிச்ச வீட்டு வீதி ஆகிய இரண்டையும் கிராமசபை நிர்வாகத்தில் இருந்து பிரித்து நெடுஞ்சாலை இலாகாவிற்கு(P.W.D) மாற்றம் செய்வித்தார். கோவளம் வெளிச்ச வீட்டு வீதி அகலமாக்கப்டது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். சிவன் கோயில் வீதி, கோவளம் வீதியூடாக பேரூந்து சேவையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் கோவளம் மக்களும், சிவன் கோயில் வீதி மக்களும் யாழ்ப்பாணத்துக்கு இலகுவாகப் பிரயாணம் செய்தனர்.
காரைநகர் ஈழத்து சிதம்பர தேவஸ்தானத்திற்கு தொலைபேசி இணைப்பையும் மின்சார வசதியையும் 1970 ஆண்டுகளிலேயே அன்னார் செய்து கொடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக கொட்டைக்காடு, அராலி, கல்லுண்டாய் வழியாக யாழ்ப்பாணப் பிரயாணம் செய்ய அப்பகுதி மக்களிற்கு அறிமுகம் செய்து வைத்தவரும் திரு.ஆ.தியாகராசா
அவர்களே. இச்சேவை தற்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் 1977ம் ஆண்டு யூலையில் நடைபெற்ற 8வது பாராளமன்ற பொதுத்தேர்தலில் அன்னார் தோல்வியடைந்ததனால் சிவன் கோயில் வீதி, கோவளம் வீதி பேரூர்ந்து சேவைகள் இரண்டும் பின்னர் முற்றாக நீக்கப்பட்டது.
காரைநகர் கிராமசபை 4ம் வட்டார அங்கத்தவராக இருந்த காலத்தில் முருக்கட அடைப்பு சந்தியில் இருந்து சாம்பலோடை மயானம் வரை நீர் ஓடையாக இருந்த பாதைக்கு மண் கொட்டி நிரப்பி போக்குவரத்து செய்ய வசதியாக தெருவாக மாற்றினார். அன்னார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இப்பாதையை அகலமாக்கி சாம்பலோடை மயானம் வரை றோட்டு போடுவித்தார். இதனால் அப்பகுதி காடுகளாகவிருந்து வீதிகளாக மாறி மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் பயன்படுத்தப்படுகின்றன. நீர் வரட்சி காலத்தில் குடிநீர் பெறுவதற்காகவும், மாரிகாலத்தில் வெண்காய பயிர் உற்பத்தி செய்யவும் இப்பாதை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.
வேதரடைப்பு றோட்டு முடிவில் இருந்து மேற்கு நோக்கி சாம்பலோடை மயானம் செல்லும் றோட்டையும் இணைத்து அணைக்கட்டு போடுவித்தார். இதனால் உவர் நீர் மாரிகாலத்தில் கிராமத்தினுள் உட்புகமாட்டாது. இந்த அணைக்கட்டு முல்;லைப்புலவு மக்கள் சிவன் கோயிலுக்கும் ஆலங்கண்டு வைரவர் கோயிலுக்குப் போவதற்காகவும் பாதையாக பயன்படுத்துகின்றார்கள்.
காரைநகர் மேற்கு வேம்படியில் இருந்து கிழக்கு நோக்கி பத்தர் கேணி பிள்ளையார் கோயில்வரை உள்ள ஒழுங்கையை அகலமாக்கி றோட்டுப் போடுவித்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அகலம் குறைந்த ஒழுங்கைகள் பல அகலப்பாதைகளாக விஸ்தரிக்கப்பட்டன.
காரைநகர் மக்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குச் சென்று அலுவல்களைச்
பல சிரமங்களிற்கு மத்தியில் செய்து வந்தனர். மக்களின் கஷ்டங்களை உணர்ந்து
காரைநகருக்கு ஒரு உப பிரதேச செயலகத்தை அரசின் உதவியுடன் ஏற்படுத்திக் கொடுத்தார். காரைநகர் ஒரு தனி பிரதேச செயலகப் பிரிவாக மாற்ற வேண்டும் என்ற
எண்ணம் அவரின் உள்ளத்தில் அன்று நன்கு பதிந்து இருந்தது. அது இன்று நனவாகியும் உள்ளது.
ஊர்காவற்றுறை இலங்கையின் இரண்டாவது இயற்கைத் துறைமுகமாகும். இதனை ஓர் சிறந்த துறைமுகமாக மாற்ற வேண்டும் என 1952ம் ஆண்டு காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த உள்நாட்டு அமைச்சர் கௌரவ பி.வி.இரத்தினநாயக்கா அவர்களிடம் மகஜர் கையளித்
தார். ஊர்காவற்றுறை 1942ம் ஆண்டுக்கு முன்னர் சிறந்த துறைமுகமாக விளங்கியது இதனை யாவரும் நன்கு அறிவர். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கம் உட்பட சுந்தரேஸ்வரர், சௌந்தராம்பிகை, சோமாஸ்கந்தர் ஆகிய விக்கிரகங்கள் யாவும் தமிழ் நாட்டில் இருந்து பாய்க்கப்பல் மூலமாக ஊர்காவற்றுறை துறைமுகத்திலேயே அந்நாளில் வந்து இறங்கின. நெல், அரிசி, தானிய வகைகள். சட்டி, பானைகள். ஓடுகள் யாவும் தமிழ் நாட்டில் இருந்து ஊற்காவற்றுறை துறைமுகத்திற்கே வந்திறங்கின. இங்கிருந்து பனை
ஓலைகள், பனை மரங்கள், புகையிலை என்பனவும் தமிழ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதும் இந்த துறைமுகத்தில் இருந்தேயாகும். ஊர்காவற்றுறையில் சுங்க இலாகா காரியாலயம் இருந்தது. இதனையெல்லாம் நன்கு உணர்ந்த அன்னார் ஊர்காவற்றுறையை மீண்டும் துறைமுகமாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். இதன் மூலம் இப்பகுதி பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்பதுடன் வேலை வாய்ப்புக்கள் பெருகும் என்பதையும்
நன்கு அறிந்தவர்.1972ம் ஆண்டு India and India Lessons To Learn என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் சிறு நூல் ஒன்றையும் வெளியிட்டார்.
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் (Campus) முன்னாள் இலங்கை சட்ட நிருபண சபை(Legislative Council) அங்கத்தவர் அமரர் கௌரவ சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் 1974ம்; ஆண்டு பரமேஸ்வராக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்டது. இதனை வைபவரீதியாக காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் சிறீமாவோ டயஸ் பண்டாரநாயக்கா அவர்கள் 06.10.1974இல் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஆ.தியாகராசா அவர்களின் முயற்சியின் பயனாக அன்னாரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து யாழ்ப்பாண கல்லூரியில்(Jaffna College) இன்னொரு யாழ்ப்பாண வளாகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ஊர்காவற்றுறை தொகுதி, வட்டுக்கோட்டைத் தொகுதி மாணவ மாணவியர்களும் கலை, விஞ்ஞானப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வசதியாக விளங்கியது. பயனும் அடைந்தார்கள். 1977ம் ஆண்டு யூலை மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த வட்டுக்கோட்டை வளாக பிரிவு இடைநிறுத்தப்பட்டது. இதனால் அன்னார் அன்று மிகவும் கவலையடைந்தார்.
06.10.1974இல் வைபவரீதியாக காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் சிறீமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்கா அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் பூரண பல்கலைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது. இன்று இப்பல்கலைக்கழகம் சிறப்புற்று விளங்குகின்றது. கௌரவ சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் அன்றைய எதிர்கால கனவு இன்று நனவாகி வடபகுதி தமிழ் மக்களின் கல்வியின் கலங்கரை விளக்காய் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திகழ்கின்றது.ஆனால் இன்று யாழ்ப்பாண தமிழர் சமுதாயமும் கல்வி பயிலும் மாணவ சமுதாயமும் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களை நினைவு கூரவோ அல்லது நினைவுச்சின்னம் அமைக்கவோ இன்றுவரை முன்வராதது கவலைக்குரியதே.
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் செயல் வீரராகவே திகழ்ந்தார். மற்றவர்களைப் போல் வெறும் அரசியல் பேசி பொழுதை வீணாக கழிக்கவில்லை. அன்னாரது இலட்சியம் பொருளாதார முன்னேற்றமும் தனது தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தலிலுமே இருந்து வந்தது. அதற்கு அன்னார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஊடாக நாம் நன்கு அறிந்து
கொள்ளலாம்.
காரைநகர் வலந்தலை சந்தியில் இருந்து சுமார் 800 யார் தூரத்தில் யாழ்ப்பாணம் செல்லும் பிரதான வீதியில் இருந்து தெற்கு நோக்கி பெரிய அணைக்கட்டு கட்டுவித்து கடல்நீர் உள்வராமலும் மழைநீர் கடலுடன் செல்வதையும் தடுத்து நன்னீர் தேக்கமாக மாற்ற வேகமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் 1977ம் ஆண்டு தேர்தல் தோல்வியை தொடர்ந்து இப்பணி இடைநிறுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
அன்னார் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரைநகர் தபால் கந்தோருக்கு புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. கருங்காலியில் புதிய உபதபால் நிலையமும் திறக்கப்பட்டது. அத்துடன் காரைநகரில் கிராமிய வங்கி திறக்கப்பட்டது. இலங்கை வங்கிக்கு ஓர் கட்டிடம் கட்டப்பட்டது ஆனால் தேர்தல் தோல்வியை தொடர்ந்து இலங்கை வங்கி கிளை
ஆரம்பிக்கப்படவில்லை.
அதே காலத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலை, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, தங்கோடை அமெரிக்கன் மிஷன் பாடசாலை ஆகிய பாடசாலைகளிற்கு புதிய கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தார். காரைநகர் துறைமுகத்திற்கு அருகாமையில் பேரூந்து நிலையம் ஒன்றும் அமைத்துக் கொடுத்தார்.
1977ம் ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற எட்டாவது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு தமிழர் ஐக்கிய முன்னணி அபேட்சகர் திரு.திருநாவுக்கரசுவிடம்
தோல்வியடைந்தார். அதனால் காரைநகர் மக்களுக்கும் வட்டுக்கோட்டை தொகுதி மக்களிற்கும் மேற்கொண்டு சேவையாற்ற முடியாமைக்காக மிகவும் மனம் வருந்தினார்.
அதன் பின்னர் இந்தியா சென்றார். ‘தென்னாசிய பொருளாதாரம்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு நூல் எழுதினார். புதுடில்லி பல்கலைக்கழகம் அந்நூலுக்கு அன்னாரைக் கௌரவித்து கலாநிதி(டாக்டர்) பட்டம் வழங்கியது.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தளவில் பொருளாதார முன்னேற்றம் பற்றி பரந்த அறிவுள்ளவராகவும் செயல்வீரராக திகழ்ந்தார் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள். 1981ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் போட்டியிட தலைமை வேட்பாளராக அன்னாரை நியமித்தனர். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திசபை தேர்
தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தேர்தல் பிரச்சார கூட்ட முடிவில் வட்டுக்கோட்டை தொகுதி மாவடியில் 26.05.1981இல் அகால மரணம் அடைந்தார். அகால மரணம் அடைந்த போது அன்னாரிற்கு வயது 65.
கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் மறைவினால் காரைநகர் சோகமயமானது. அன்னாரின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு காரைநகர் வலந்தலை சந்திக்கு கிழக்கே அன்னாரின் கனவாக இருந்த நன்னீர்த் தேக்க புனித பூமியில் சிதைமூட்டப்பட்டு அக்கினியுடன் சங்
கமமானார். செயல் வீரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் பூதவுடலுக்கு அன்றைய பிரதமர் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டு சோகக் கண்ணீர் சொரிய அஞ்சலி செய்தார்கள். பராளுமன்றத்திலும் அன்னாரின் நினைவாக பல அமைச்சர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் ஜனநாயக மரபுக்கு மதிப்பளித்தவர். மக்கள் சேவையே மகேசன் சேவையாக தன் வாழ் நாட்களை அர்ப்பணித்தவர். அன்னாரைப் போன்ற பரந்த மனப்பாண்மை கொண்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை அரசியலில் இனிவரும் காலங்களில் தோன்றுவது கடினமானதே.
முற்றும்!
கருத்து, எழுத்து, சிந்தனை, செயல்வடிவம்
கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் சமகாலத்தில்; வாழ்ந்து அன்னாரின் தனித்துவத்தை அன்னாளில் உள்வாங்கி இன்று கனடாவில் வாழ்ந்து வரும் ஆயிலி, காரைநகரைச் சேர்ந்த திரு.சி.சிவானந்தரத்தினம் அவர்கள்.